/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு விருது கிடைச்சாச்சு! விளைபொருள் இருப்பு மற்றும் விற்பனை 'துாள்'
/
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு விருது கிடைச்சாச்சு! விளைபொருள் இருப்பு மற்றும் விற்பனை 'துாள்'
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு விருது கிடைச்சாச்சு! விளைபொருள் இருப்பு மற்றும் விற்பனை 'துாள்'
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு விருது கிடைச்சாச்சு! விளைபொருள் இருப்பு மற்றும் விற்பனை 'துாள்'
ADDED : நவ 14, 2024 08:53 PM

உடுமலை ; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், அதிகளவு விளை பொருட்கள் வணிகம் மற்றும் இருப்பு வைப்பு என சிறப்பாக செயல்பட்டதற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு, சுற்றுப்புற கிராம விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வந்து, இ - நாம் திட்டத்தின் கீழ், ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு, கடந்த ஒரு ஆண்டில், 1,281 டன் தேங்காய் பருப்பு இருப்பு வைக்கப்பட்டு, 8.22 கோடி ரூபாய் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ் நடக்கும், கொப்பரை ஏலத்தில், கடந்த ஒரு ஆண்டில், 1,200 விவசாயிகள், 330 டன் கொப்பரை கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்துள்ளனர்.
மேலும், 250 விவசாயிகள், 1,630 டன் மக்காச்சோளம், மல்லி, கொண்டைக்கடலை உட்பட பல்வேறு, விவசாய விளை பொருட்களை கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு, இ - நாம் திட்டத்தில், ரூ. 6.5 கோடி ரூபாய் மதிப்பில் வணிகம் நடந்துள்ளது.
இவற்றில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு, ஒழுங்கு முறை விற்பனை கூட நிர்வாகம் வாயிலாக நேரடியாக, பொருள் மதிப்பில், 50 சதவீதம் பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.
அதே போல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக, 80 சதவீதம் வரை பொருளீட்டுக்கடன் பெற்றுத்தரப்படுகிறது. இவ்வாறு, ரூ. 8.16 கோடி மதிப்பில், இருப்பு வைக்கப்பட்ட விளை பொருட்களுக்கு பொருளீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தேசிய மின்னணு களஞ்சியம் நிறுவனம், அதிக அளவு விளை பொருட்களை இருப்புவைத்து, பொருளீட்டு கடன் வழங்கிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நற்சான்று மற்றும் கேடயம் வழங்கியுள்ளது.
ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: இங்கு விளை பொருட்களை இருப்பு வைத்து, நல்ல விலை வரும் போது, விற்பனை செய்யும் வகையில், 8 ஆயிரம் டன் கொள்ளவு கொண்ட, குடோன்கள் உள்ளன.
அதே போல், விளை பொருட்களை காய வைத்து, தரம் பிரிக்கும் வகையில், உலர் களம் வசதியும் உள்ளது. ஆறு மாதம் வரை, விவசாயிகள் விளை பொருட்களை இருப்பு வைத்து பயன்பெறலாம்.
ஒரு விவசாயிக்கு, பொருளீட்டுக்கடனாக, அதிக பட்சம், ரூ. 3 லட்சம் வரை வழங்கப்பட்ட நிலையில், தற்போது, ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
விளை பொருட்களை தேசிய அளவிலான வேளாண் சந்தை ( இ-நாம்) வாயிலாக விற்பனை செய்யும் வசதியும் உள்ளது.
இதன் வாயிலாக, விவசாய விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதோடு, விவசாயிகள் வங்கி கணக்கில் உடனடியாக கொள்முதல் செய்த, விளை பொருட்களுக்கு உரிய தொகை வரவு வைக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் அறுவடை செய்த விளை பொருட்களை, ஒழுங்கு முறை விற்பனை கூட உலர் களத்திற்கு கொண்டு வந்து காய வைத்து, இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யலாம்.
தற்போது, உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் அறுவடை துவங்க உள்ள நிலையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள உலர் களம், இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், காய்கறி, பழங்களை இருப்பு வைத்து, விற்பனை செய்யும் வகையில், குளிர் பதன கிடங்கு வசதியும் உள்ளது. எனவே, இந்த வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.