/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மறக்க முடியாத 'மணியார்டர்' மகிழ்ச்சி
/
மறக்க முடியாத 'மணியார்டர்' மகிழ்ச்சி
ADDED : ஜன 01, 2025 07:17 AM

டிஜிட்டல் புரட்சியால், பணப்பரிவர்த்தனை எளிதானது. ஆனால், கடந்த 2010க்கு முன்பு வரை கூட, மணியார்டர் தான் பலருக்கும் கைகொடுத் தது. பணத்தேவையை எதிர்பார்த்து காத்திருந்தோருக்கு மணியார்டரின் அருமை தெரியும்.
விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவருக்கு, மணியார்டரில் தான் அப்போது பணம் வரும். மாத பால் காசுக்கு கூட மகன், மகள் அனுப்பி வைக்கும் மணியார்டர் தொகையை எதிர்பார்த்து பெற்றோர் காத்திருந்தது அக்காலம். நவீன காலத்திலும் மணியார்டர் பயன்பாடு தொடர்கிறது.
காத்திருக்கும் முதியோர்
கடந்த, 2009 முதல், திருப்பூர் கோட்டத்தில் தபால்காரராக பணியாற்றி வரும் அனார்கலி கூறியதாவது:
முதியோர் உதவித்தொகை, 200 ரூபாயாக இருந்தபோது, கிராமங்களில் முதியோர் சிறுதொகைக்காக எங்களை எதிர்பார்த்து காத்திருப்பர். ஓரிரு நாள் தவணையாகி விட்டால் கூட, தபால்காரர்களை எங்கு பார்த்தாலும், 'எங்களுக்கு காசு வந்திருச்சாமா' என கேட்பார்கள்.
இன்றும் மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை, முதியவர்களுக்கு மணியார்டர் மூலம் தான் அனுப்பி வைக்கப்படுகிறது. தபால் அலுவலகத்தில், ஒரு மணியார்டர் பார்முக்கு, 5,000 ரூபாய் அதிகபட்ச தொகை அனுப்பலாம்; ஒருவர் எத்தனை மணியார்டர் வேண்டு மானாலும் அனுப்ப வசதிகள் உள்ளது.
நம்பாத மூதாட்டி
பணியில் இணைந்த போது, ஒரு மூதாட்டி, 'நீ யாரு... எந்த ஊரு' என கேள்விமேல் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க... மணியார்டர் காசு கொடுக்க வந்திருக்கேன்னு சொன்னப்ப மொதல்ல நம்பல; அப்புறம் தான் நம்புனாங்க.
ஒரு ஊருக்குள் போகும் போது, ரெகுலராக போற வழியில போய் அதே வழியில் திரும்பி வரணும். நம்மை எதிர்பார்த்து பஞ்சாயத்து ஆபீஸ், மரத்தடி, திண்ணை, ரேஷன் கடைன்னு நெறயை பேர் உட்கார்ந்து இருப்பாங்க.
மணியார்டர் காசு வாங்கிறவங்க, போஸ்ட்மேன் வந்துட்டாங்கன்னு போய் ஊருக்குள்ள சொன்னதுக்கு அப்புறம், என்னை தேடி வருவாங்க; உங்களுக்கு மணியார்டர் பணம் வந்திருக்குமானு சொல்லும் போது அவங்களுக்குள்ள ஒரு சந்தோஷம் வரும் பாருங்க... அது மனசுக்குள்ள இருந்து என்னைக்குமே அகலாது.
- இன்று (ஜன. 1.,) மணியார்டர் அனுப்பும் முறை துவங்கிய தினம்.

