/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வி.ஐ.பி.,' வார்டில் விதவிதமான குறைகள்
/
'வி.ஐ.பி.,' வார்டில் விதவிதமான குறைகள்
ADDED : ஆக 01, 2025 10:05 PM

தி ருப்பூர் மாநகராட்சியில் உள்ள வி.ஐ.பி., வார்டுகளின் வரிசையில், 35வது வார்டும் இடம் பெற்றிருக்கிறது.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 9,500 வாக்காளர்களை உள்ளடக்கிய இந்த வார்டில், 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
யூனியன் மில் ரோடு, கே.பி.என்., காலனி, சடையப்பன் கோவில் ரோடு உள்ளிட்ட இடங்களில் தொழிலதிபர்கள் வசிக்கும் குடியிருப்புகளும், அப்பார்ட்மென்ட்களும் உள்ளதால், 'வி.ஐ.பி., வார்டு' என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. குடிநீர் வினியோகம், வீடு, வீடாக குப்பை சேகரிப்பது உள்ளிட்ட பணிகள் தொய்வின்றி நடக்கின்றன.
'ஸ்மார்ட்' இல்லாத ஸ்மார்ட் ரோடு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், வீதி ரோடுகள், கான்கிரீட் ரோடுகளாக மாற்றப்பட்டுள்ளது. நடைபாதைகளும் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டு, 'பளிச்'சென ஆயின. சாலையோர நடைபாதைகள் அனைத்தும் வாகன பார்க்கிங் இடமாக மாறியிருக்கிறது; சாலையோரம் உள்ள கடைகளுக்கு சரக்கேற்றி வரும் கனரக வாகனங்களும் நடைபாதை மீது 'பார்க்கிங்' செய்யப்படுவதால், பல இடங்களில் நடைபாதைகள் சிதிலமடைந்துள்ளன.
சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் அவ்வப்போது ஏற்படும் உடைப்பால் ஸ்மார்ட் ரோட்டை தோண்டி, குழாய் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்படுவதால், பல லட்சம் ரூபாயை கொட்டி புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் ரோடு, பல இடங்களில் பாழ்பட்டு கிடக்கிறது.
பராமரிப்பின்றிபொது மயானம் வார்டில் உள்ள பொது மயானம் பராமரிப்பின்றி, செடி, கொடி சூழ்ந்துள்ளது. மின் மயானத்துக்கு செல்லும் ரோடும் பழுதடைந்திருக்கிறது. பொது மயானம், திறந்தநிலையில் இருப்பதால், இரவில், சமூக விரோதிகள் நுழைந்து, மது அருந்துவது உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் சூழலும் உள்ளது.
திறப்பு விழா காணாதசுகாதார நிலையம் வாலிபாளையம், சபாபதிபுரம், 1வது வீதியில், புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற துணை சுகாதார நிலையம் திறப்பு விழா காணாமல் இருக்கிறது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்ட'அம்மா கிளினிக்' பயன்பாட்டில் இல்லை.கோர்ட் வீதியில் உள்ள இக்கட்டடம் வீணாக பூட்டிக்கிடக்கிறது.
இப்பகுதி மக்களின் மருத்துவ நலன் சார்ந்து, சுகாதார நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது, வார்டு மக்களின் எதிர்பார்ப்பு.
தேங்கும் கழிவுநீர் குவியும் குப்பை
பெரியார் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு இருக்கிறது. ஆனாலும், திறந்தவெளியில் கழிவுநீர் வழிந்தோடுகிறது; இதனால், எழும் துர்நாற்றம், அப்பகுதி மக்களை முகம் சுளிக்க வைப்பதுடன், நோய் பரப்பும் சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. 'எனவே, கழிவுநீர் கால்வாய் கட்டமைக்க வேண்டியது அவசியம்' என்கின்றனர் வார்டு மக்கள்.
வார்டில் குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது, மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்புவதற்குரிய, நுண்ணுயிர் கூடம் கட்டப்பட்டிருப்பினும், அது, பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது. வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, திறந்தவெளியில் கொட்டப்படுகிறது; துர்நாற்றத்தை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதே போன்று, மந்திரி வாய்க்காலில் புதர் மண்டியும், பாலிதீன் குப்பைகள் அடைபட்டும் இருக்கிறது.