/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீரபாண்டி பள்ளி விவகாரம்; பா.ஜ., போராட்டம் போலீசுடன் தள்ளுமுள்ளு; மறியல் செய்ததால் பரபரப்பு
/
வீரபாண்டி பள்ளி விவகாரம்; பா.ஜ., போராட்டம் போலீசுடன் தள்ளுமுள்ளு; மறியல் செய்ததால் பரபரப்பு
வீரபாண்டி பள்ளி விவகாரம்; பா.ஜ., போராட்டம் போலீசுடன் தள்ளுமுள்ளு; மறியல் செய்ததால் பரபரப்பு
வீரபாண்டி பள்ளி விவகாரம்; பா.ஜ., போராட்டம் போலீசுடன் தள்ளுமுள்ளு; மறியல் செய்ததால் பரபரப்பு
ADDED : ஜூலை 14, 2025 11:54 PM

திருப்பூர்; திருப்பூர் அரசு பள்ளியில் வகுப்பறை வசதியில்லாததை கண்டித்தும், இதுதொடர்பாக நியாயம் கேட்கும் போராட்டத்துக்காக திரண்டிருந்த பா.ஜ., வினர், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட, 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,239 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் போதிய வகுப்பறை வசதியில்லாததால், மாணவ, மாணவியர் மரத்தடி மற்றும் மாடியில் வைத்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்யும் வகையில் பெற்றோர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடத்த திட்டமிடப்பட்டது.
பா.ஜ., வினர் மறியல்
இப்பிரச்னை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பள்ளியில் வந்து பேசுவதாக பா.ஜ., சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் கட்சியினர் பள்ளி முன் திரண்டனர். இதற்கு போலீசார் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
'இதுதொடர்பான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. அங்கு பங்கேற்று கருத்துகளை தெரியப்படுத்துமாறு,' பா.ஜ., நிர்வாகிகளிடம் போலீசார் கூறினர்.
இதனை ஏற்க மறுத்த பா.ஜ.,வினர், 'பள்ளியில் கூட்டம் நடத்துவதாக இருந்தது. சி.இ.ஓ., திடீரென கூட்டத்தை ஏன் அங்கு நடத்தினார். சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி இங்கே வந்து பேச வேண்டும்,' என தெரிவித்து கலைந்து செல்ல மறுத்து விட்டனர்.
அதன்பின், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார், நிர்வாகி களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, மாவட்ட செயலாளர் ஜீவ உமா உள்ளிட்ட சில பெண் நிர்வாகிகளை அங்கிருந்த நல்லுார் உதவி கமிஷனர் தையல் நாயகி, வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்ற முயன்றார். இதனால், ஜீவ உமாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து பிற நிர்வாகிகள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின், மறியல் செய்த, 40 பேரை போலீசார்கைது செய்தனர்.
வகுப்பறை கட்டி கொடுக்கிறோம்!
வீரபாண்டி பள்ளியில் உள்ள வகுப்பறை பிரச்னை குறித்து, திருப்பூர் பா.ஜ., வினர், மாநில தலைவர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். பின், அவர் பா.ஜ., சார்பில் தேவையான வகுப்பறை கட்டடம் கட்டி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து, வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பள்ளி வகுப்பறை கட்டி கொடுக்கவும் முடிவு செய்தனர். இதுதொடர்பாக, பள்ளிக்கு வர இருந்த சி.இ.ஓ.,விடம் முறையிட இருந்தோம். இதையெல்லாம் அறிந்து கொண்டு கூட்டத்தை கலெக்டர் அலுவலகத்தில் நடத்தியுள்ளனர். கூட்டம் குறித்து அனைவருக்கும் முறையாக தெரியப்படுத்தவில்லை. கல்வி அதிகாரி பள்ளிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், போலீசார் எங்களை கைது செய்தனர். பெண் என்றும் கூட பாராமல், நிர்வாகிக்கு காயம் ஏற்படும் வகையில் போலீசாரின் நடவடிக்கை இருந்தது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
- பா.ஜ., நிர்வாகிகள்