ADDED : மார் 14, 2024 12:04 AM

பல்லடம் : பல்லடம் பத்திரப்பதிவு ஆபீஸில் குவிந்த பொதுமக்கள், பணிகள் மந்த கதியில் நடந்ததால், மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
பல்லடம் பத்திர அலுவலகத்தில், 39 கிராம மக்கள் பத்திர பதிவு பணி மேற்கொள்கின்றனர். தினசரி, நுாற்றுக்கும் மேற்பட்ட டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்று பத்திர பதிவுக்கு காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.
முன்னதாக, நேற்று, 120 டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. அடுத்த மாதம் பங்குனி என்பதால், பெரும்பாலும் பத்திர பதிவு செய்ய யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதன் காரணமாக, நேற்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. இதற்கிடையே, சர்வர் பிரச்னை ஒருபுறம் இருக்க, ஆடிட்டிங் பணி நடந்து வந்ததால், பத்திர பதிவு பணி மேலும் பாதிக்கப்பட்டது.
காலை முதலே பத்திர அலுவலகத்தை பொதுமக்கள் சூழ்ந்திருந்தனர். இரு சார்-பதிவாளர்களில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்த நிலையில், மற்றொருவர் உணவு இடைவேளைக்கு பின்னரே வந்தார். இவ்வாறு, பல்வேறு காரணங்களால், பத்திரப்பதிவு பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் மாலை வரை காத்திருந்தனர். பணிகள் தாமதம் காரணமாக, இரவு வரை பத்திர பதிவு பணி நீடித்தது.

