/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுநீரில் கலந்து வீணாகும் குடிநீர்
/
கழிவுநீரில் கலந்து வீணாகும் குடிநீர்
ADDED : நவ 03, 2025 11:59 PM

பல்லடம்: பல்லடம் நகராட்சி, தினசரி மார்க்கெட் பகுதியில், குழாய் உடைப்பு காரணமாக, குடத்துடன், சாக்கடை கால்வாயும் நிரம்பி வருகிறது.
பல்லடம் நகராட்சிக்குட்பட்ட, தினசரி மார்க்கெட் பகுதியில், விநாயகர் கோவிலை ஒட்டி, பொதுமக்கள் பயன்படுத்தும் பொது குடிநீர் குழாய் உள்ளது. தினசரி மார்க்கெட் வியாபாரிகள் உட்பட, பொதுமக்களும் இதை பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள குழாய் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டி, பொதுமக்கள், பிளாஸ்டிக் கவர் சுற்றி வைத்துள்ளனர். இருப்பினும், ஒவ்வொரு முறை குடிநீர் வினியோகிக்கப்படும்போதும், உடைப்பு ஏற்பட்ட குழாயில் இருந்து, தண்ணீர் வெளியேறி, கீழே உள்ள சாக்கடை கழிவு நீரில் கலந்து வீணாகி வருகிறது.
இதன் காரணமாக, ஏராளமான குடிநீர் வீணடிக்கப்பட்டு வருகிறது. குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

