/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் வழிப்பாதைகள் துார்வார எதிர்பார்ப்பு
/
நீர் வழிப்பாதைகள் துார்வார எதிர்பார்ப்பு
ADDED : செப் 19, 2025 09:13 PM
உடுமலை; வட கிழக்கு பருவ மழை துவங்கும் முன், உடுமலையிலுள்ள நீர் வழிப்பாதைகளை துார்வாரி தயார்படுத்த வேண்டும் என்று விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் அக்., துவங்கி டிச., மாதம் வரை வட கிழக்குப் பருவ மழை பெய்வது வழக்கம். அவ்வகையில் நடப்பாண்டிலும் இப்பருவ மழை துவங்கும் அறிகுறிகள் தென்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
உடுமலை பகுதியில், கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை, ராஜவாய்க்கால் போன்ற நீர்வழிப்பாதைகள் உள்ளன. பொதுவமாக பருவ மழை துவங்கும் முன்னதாக அனைத்து நீர் வழிப்பாதைகள், ஓடைகள் துார் வாரப்படும். இதனால், மழை நீர் எங்கும் தடையில்லாமல் அதன் பாதையில் கடந்து செல்லும்.
மேலும், தேவையற்ற இடங்களில் சென்று பாய்வதும், தாழ்வான பகுதிகள், குடியிருப்புகளில் மழை நீர் சென்று பாய்வதும், தேங்கி நிற்பதும் தவிர்க்கப்படும்.
ஆனால், உடுமலையிலுள்ள நீர்நிலைகளில் கழிவுகளும், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கியுள்ளன. அருகிலுள்ள குடியிருப்புகளின் கழிவுகளும் இங்கு போடப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
மேலும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்னதாக அவை முறையாக துார் வாரி சீரமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக உடுமலை நகராட்சியினர் மற்றும் அரசுத்துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.