sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தந்தோம் மனுக்களை... காப்பீர்களா எங்களை?'

/

'தந்தோம் மனுக்களை... காப்பீர்களா எங்களை?'

'தந்தோம் மனுக்களை... காப்பீர்களா எங்களை?'

'தந்தோம் மனுக்களை... காப்பீர்களா எங்களை?'


ADDED : ஆக 18, 2025 10:37 PM

Google News

ADDED : ஆக 18, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ''நம்பிக்கையுடன் மனுக்களைத் தந்துவிட்டோம். இதற்கு தீர்வுகண்டு, அதிகாரிகள் எங்களைக் காக்க வேண்டும்'' என்கின்றனர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் நேற்று மனு அளித்த பொதுமக்கள்.

மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே , டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். மொத்தம் 490 மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்காக துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குடிநீருக்கு சிக்கல்



தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி அளித்த மனு:

திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்கு, 2வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களாக, பரமசிவம்பாளையம், மாரப்பம்பாளையம் புதுார், பள்ளிபாளையம் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 4வது திட்ட குடிநீரும் சரிவர வினியோகிக்கப்படுவதில்லை. நிலத்தடி நீர் மாசடைந்து, உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால், குடிநீருக்கு பயன்படுத்த முடிவதில்லை. 2வது திட்ட குடிநீரை தடையின்றி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

போன் டவர் கூடாது



அகில பாரத இந்து மகாசபா மாநில இளைஞரணி தலைவர் வல்லபைபாலா தலைமையில் வாவிபாளையம் பகுதி மக்கள் திரண்டுவந்து மனு அளித்தனர். அம்மக்கள் கூறியதாவது:

நெருப்பெரிச்சல் அருகே, வாவிபாளையம், எஸ்.குருவாயூரப்பன் நகர், வேப்பமரத்து பஸ் ஸ்டாப் பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். ஏற்கனவே இப்பகுதியில் இரண்டு மொபைல்போன் டவர்கள் உள்ளன. அருகிலேயே மேலும் ஒரு டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயற்சித்துவருகிறது. மொபைல் போன் டவர்களால் கதிர்வீச்சு அதிகமாக உள்ளது. கூடுதல் டவர் அமைத்தால், குழந்தைகள், முதியோர், கர்ப்பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. டவர் அமைக்க அனுமதிக்கக்கூடாது. டவரை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும்.

நாய்க்கடி: மக்கள் தவிப்பு



சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை:

மத்திய, மாநில அரசுகள் தெருநாய் கடியிலிருந்து மக்களை காப்பாற்ற எவ்வித சரியான திட்டங்களையும் வகுக்கவில்லை.

பல்லடம் நகர பகுதியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 81 நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. வடுகபாளையம் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு கருத்தடை செய்ய, அரசு அனுமதி அளித்துள்ளது. போதிய கட்டட வசதிகள் இல்லாததால், கருத்தடை செய்யப்படவில்லை. மாவட்டத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அந்நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியில், தெருநாய்களை பராமரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அனுமதியின்றி பைக் டாக்ஸி



திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் பொதுநல சங்கத்தினர் அளித்த மனு:

திருப்பூர் நகர பகுதிகளில், மூவாயிரம் பயணியர் ஆட்டோக்கள் இயங்குகின்றன. மாநகர பகுதிகளில், முறையான அனுமதி பெறாமல், பைக் டாக்ஸிகள் இயங்குகின்றன. ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பைக் டாக்ஸி மீது நடவடிக்கை தேவை.

தடுப்புச்சுவர் அகலுமா?



அங்கேரிபாளையம் பகுதி மக்கள் அளித்த மனு:

அங்கேரிபாளையம் 2வது வீதியில், தனியார் லே அவுட் ரோடுகள், தான பத்திரமாக செட்டிபாளையம் ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளதால், பொதுமக்களாகிய நாங்கள், பிரதான சாலையை அடைவதற்கு 1 கி.மீ., துாரம் சுற்றவேண்டியுள்ளது. அந்த சுவரை அகற்றி, ரோட்டை பொது பயன்பாட்டுக்கு மீட்டுத்தரவேண்டும்.

பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புகள்



திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டினுள், தள்ளுவண்டி கடை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், லிப்ட், நகரும் படிக்கட்டுக்களை பயன்பாட்டுக்கு கொண்டுவரக்கோரியும், செந்தமிழர் தேசிய முன்னேற்ற கழகத்தினர் மனு அளித்தனர்.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு



தேவம்பாளையம் கிராம மக்கள் அளித்த மனு:

பழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தில், அழகுமாயவர் பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 2018ல் திட்டமிடப்பட்டு, கற்கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. கோவில் சுற்றுச்சுவர் கட்டமான பணிகளுக்கு, பெண் ஒருவர் இடையூறு ஏற்படுத்துகிறார். அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனை நிலத்தை விற்றுவிட்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகட்டியுள்ளார். இலவசப் பட்டாவை ரத்து செய்வதோடு, கோவில் நிலத்தையும் மீட்க வேண்டும்.

ஆம்புலன்ஸில் வந்து தொழிலாளி மனு


குன்னத்துார் அருகே, 16 வேலம்பாளையத்தை சேர்ந்த நேதாஜி, 26; விசைத்தறி தொழிலாளி. உறவினர்களுடன், காலில் கட்டுடன், ஆம்புலன்ஸில், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். நேதாஜியை ஸ்ட்ரெச்சரில் துாக்கிவந்த உறவினர்கள், தரையில் பாய் விரித்து, படுக்க வைத்தனர். முன்விரோதத்தால், சிலர் தன்னை வீடு புகுந்து பலமாக தாக்கியதாகவும், போலீசார் வழக்குப்பதிவு செய்தபோதும், 45 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. வீடு புகுந்து தாக்கியவர்களை கைது செய்யவேண்டும் என தெரிவித்தார். போலீசார் அவரை வீல் சேரில் அமரவைத்து, கலெக்டரிடம் மனு அளிக்கச் செய்தனர்.








      Dinamalar
      Follow us