/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திட்டத்தை புதுப்பிக்க நிதி வேண்டுமாம்!
/
திட்டத்தை புதுப்பிக்க நிதி வேண்டுமாம்!
ADDED : ஜூன் 11, 2025 07:37 PM
உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், குடிமங்கலத்தில் 23, மற்றும் மடத்துக்குளத்தில் 11 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், திறந்த வெளிக்கழிப்பிடம் இன்றி தன் சுத்தம் முழுமையாக பின்பற்றுவதற்கும் துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மையும் பின்பற்றப்படுகிறது.
கிராமங்களில் வீடுகள் தோறும் குப்பை சேகரித்து அவற்றை மக்கும், மக்காதவையாக தரம் பிரித்து உரம் தயாரிக்க வேண்டும். மக்காத கழிவுகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும் வேண்டும்.
கழிவுகளை தரம் பிரித்து கொட்டுவதற்கு கிராமங்களில் உரக்குடில்கள் லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன. மூன்றாண்டுகளுக்கு முன் மீண்டும் அந்த உரக்குடில்கள் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் உரம் தயாரிக்கும் பணிகள் மட்டும் மேற்கொள்ளவில்லை. உரக்குடில்கள் அனைத்தும் பயன்பாடில்லாமல் பூட்டிய நிலையில் உள்ளன.
துாய்மைப்பணியாளர்கள் கழிவுகளை வீடுகள் தோறும் சேகரித்து கிராமங்களின் எல்லை பகுதிகளிலும், மயானங்களின் அருகிலும் குவிக்கின்றனர்.
ஊராட்சி அலுவலர்கள் கூறியதாவது: இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் இல்லை.
இருப்பினும் கழிவுகளை தரம் பிரித்து கொட்டுவதற்கும், அவற்றை முறையாக சேகரிப்பதற்கும் ஊராட்சி நிர்வாகங்களின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க நிதிஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்களை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.