/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடுமையாக உழைத்தோம்... விருது பெற்றோம்!
/
கடுமையாக உழைத்தோம்... விருது பெற்றோம்!
ADDED : நவ 14, 2025 12:11 AM

திருப்பூர்: தொடக்க கல்வி இயக்ககம், 2024 - 2025 ம் கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு, சிறந்த கல்வி சேவைக்கான விருதை, இன்று (நவ. 14) காரைக்குடியில் நடக்கும் விழாவில், தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குகிறது. அதில், திருப்பூர் மாவட்டத்தில் மூன்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் இவ்விருது பெறுகின்றனர்.
தொடக்க கல்வி இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான செயல்பாடுகளை கொண்டுள்ள பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளி, தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம், விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கிறது. நடப்பாண்டுக்கான பட்டியலில், திருப்பூர் கல்வி மாவட்டத்தில், விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தாராபுரம் கல்வி மாவட்டத்தில் எரகாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, காரத்தொழுவு (மடத்துக்குளம்) ஆகிய மூன்று பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. இப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, இன்று (14 ம் தேதி) காரைக்குடி, அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பாராட்டு தெரிவித்து விருது வழங்குகிறார்.
விருது சாத்தியமானது எப்படி என்பது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது.
சிறப்பான பணி
விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜோயல் விமலகாந்தன்:
ஓட்டுக்கட்டடத்தில் பள்ளி செயல்பட்டதால், மழை பெய்யும் போது பெரும் சிரமமாக இருந்தது. இதற்காக, கட்டமைப்பை மாற்றினோம். பள்ளிக்கு மாணவ, மாணவியர் தாமதமாக வருவதை தடுக்க 'ஆட்டோமேட்டிக் பெல் சிஸ்டம்,' நிறுவினோம்.
எக்காரணத்தை முன்னிட்டு, தாமதம் கூடாது. தினமும், 9:10 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதை பெற்றோரும் வரவேற்றனர். கல்வி கற்றலை எளிமையாக்க, அனைத்து வகுப்பறையிலும் ஸ்மார்ட் போர்டு நிறுவியுள்ளோம். கல்வியை தாண்டி தனித்திறனை அறிய, பேச்சு, நடனம், நாடகம், நடிப்பில் சிறப்பாக செயல்படும் மாணவரின் திறமைகளை வெளிக்கொண்டு வர, நிறைய நிகழ்ச்சிகளை பெற்றோர் ஒத்துழைப்புடன் நடத்துகிறோம்.
தனியார் பள்ளிக்கு நிகராக வருகைப்பதிவு, வீட்டுப்பாடத்தை 'வாட்ஸ்அப்' குரூப்பில் தினமும் 'அப்டேட்' செய்ததால், வருகைப்பதிவு அதிகரித்தது. 495 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் குழு, ஆசிரியர்களின் பங்களிப்பு வாயிலாக, தொடர்ந்து இயன்ற பணிகளை சிறப்பாக செய்ததால், விருது எங்களுக்கு கிடைத்தது.
பெற்றோரிடம் பேசுவோம்
எரகாம்பட்டி, பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்ரமணியம்:
பெற்றோருடன் தொடர்பு கொண்டு ஒவ்வொரு மாணவ, மாணவியரின் நிலை குறித்து, தினமும் ஒரு மணி நேரம் பேசினோம். உயர்கல்விக்கு துவக்கப்பள்ளியில் இருந்தே ஊக்கப்படுத்துகிறோம்; உயர்நிலை பள்ளிக்கு செல்லும் போது, எங்கள் பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று, பள்ளியின் பெயரை காப்பாற்றுகின்றனர். பள்ளியில் துாய்மைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
வீடு வீடாக சென்றோம்
காரத்தொழுவு பள்ளி தலைமையாசிரியர் ராணி:
ஒரு மாணவர், மாணவி பள்ளிக்கு வரவில்லையெனில், காரணம் அறிந்து, மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்த வீடுவீடாக சென்று பெற்றோரிடம் பேசினோம். 1917ம் ஆண்டில் துவங்கப்பட்ட இப்பள்ளி, 108 ஆண்டுகளை கடந்து பயணித்து கொண்டிருக்கும் வேளையில், இவ்விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியாக ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் ஆகியோர் உணர்கிறோம். இந்த விருது கிடைப்பதற்கு பெற்றோரின் 100 சதவீத ஒத்துழைப்பு, எங்களின் ஒட்டுமொத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி, விருது என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

