/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 படிப்புக்கு பின் என்ன செய்யலாம்?
/
பிளஸ் 2 படிப்புக்கு பின் என்ன செய்யலாம்?
ADDED : ஏப் 02, 2025 07:09 AM
திருப்பூர்,: பிளஸ் 2 படிப்புக்கு பின், எதிர்கால வாழ்க்கையை வளமானதாக்கும் வேலை வாய்ப்புக்கு, எதுமாதிரியான உயர்கல்வியை தேர்வு செய்வது என்பது தொடர்பாக, 'தினமலர்' வழிகாட்டி - கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்ச்சி, திருப்பூரில், வரும், 5 மற்றும், 6ம் ஆகிய தேதிகளில், திருப்பூர், வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
'தினமலர்' நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் சார்பில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம், கே.எம்.சி.எச்., மற்றும் டாக்டர் என்.ஜி.பி., கல்விக் குழுமம், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆப் டெக்னாலஜி, 'தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆப் இந்தியா' ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, 'வழிகாட்டி' நிகழ்ச்சி நடத்துகிறது.
தெளிவு கிடைக்கும்
பிளஸ் 2 முடித்த பின், நல்ல சம்பளம் மற்றும் மனநிறைவுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு எதுமாதிரியான உயர்கல்வியை தேர்வு செய்வது என்ற குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், இந்நிகழ்ச்சி அமைய இருக்கிறது. உயர்கல்விக்கு விண்ணப்பிக்க அப்ளிகேஷன் வாங்குவது முதல், அட்மிஷன் வரையிலான அனைத்தும் வழிகாட்டுதல்களையும் இங்கு பெற முடியும்.
திருப்பூர் வித்யா கார்த்தி திருமண மண்டபத்தில், வரும், 5, 6ம் தேதிகளில், காலை, 10:00 முதல், மாலை, 6:30 மணி வரை, வழிகாட்டி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடக்க இருக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, 70 முன்னணி கல்வி நிறுவனங்கள், அரங்கு அமைக்கின்றன. வழிகாட்டி கருத்தரங்கில், 10க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.
கூடுதல் தகவல்கள்
கருத்தரங்கில், புதிதாக அறிமுகமாகியுள்ள படிப்புகள், அரசு வேலை வாய்ப்பு மற்றும் 'நீட்' தேர்வுக்கான பிரத்யேக விளக்கம் அளிக்கப்படும். மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், 'ஏஐ' தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், ரோபோடிக்ஸ், சட்டம், அறிவியல் கலை உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில், துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் பேசுகின்றனர். வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கும் துறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கவுள்ளனர். பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் போதே வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும், விளக்கப்படும்.
எதிர்காலம் சிறக்கும்
'சமூக, பொருளாதார நிலையில் சிரமத்துடன் வாழ்ந்து வரும் பலருக்கு, அவர்களின் பள்ளி பருவத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாததும், திக்கு திசை தெரியாத வாழ்க்கை பயணத்தில், கிடைத்த வேலையில், சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தி வரும், எளிய, நடுத்தர வர்க்கத்தினரின் மகன் மற்றும் மகளின் வளமிக்க வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாக, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி அமையவிருக்கிறது. இதில் பங்கேற்க, கொடுக்கப்பட்ட 'க்யூ ஆர் கோடு' ஸ்கேன் செய்து, இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.