ADDED : ஜன 16, 2025 11:22 PM
திருப்பூர்; அலகுமலை ஜல்லிக்கட்டு நடத்த வசதியான இடம் தேர்வு செய்யும் பணியில், காளைகள் நலச்சங்கத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த, 5 ஆண்டுகள் முன், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை, அதைத் தொடர்ந்து, அத்தடையை நீக்க வேண்டும் என்ற போராட்டம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன; அதற்கு, எளிதாக அனுமதியும் வழங்கப்பட்டது.
திருப்பூர், அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டு, கடந்த, 5 ஆண்டுகள் முன், முதன் முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
பெரும் ஆதரவை பெற்ற ஜல்லிக்கட்டு, இந்தாண்டும் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த மாதம், 9 ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, ஜல்லிக்கட்டு தேதியை ஒத்தி வைக்குமாறு, மாவட்ட எஸ்.பி., அறிவுறுத்தியுள்ளார். விளைவாக, ஜல்லிக்கட்டு நடத்தும் தேதியை மாற்றியமைக்க, சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க தலைவர் பழனிசாமி கூறுகையில், ''ஆண்டுதோறும், அலகுமலை ஜல்லிக்கட்டில், 800 காளைகள் வரை பங்கேற்கின்றன.
இம்முறை, வசதியான இடத்தில் போட்டி நடத்த ஏதுவாக அலகுமலை அல்லது, அருகேயுள்ள தொங்குட்டிபாளையம் பகுதியில், போட்டி நடத்த இடம் தேர்வு செய்து வருகிறோம். அடுத்த மாதம், 16ம் தேதி போட்டி நடத்த ஆலோசித்துள்ளோம்; தேதி இறுதி செய்யப்படவில்லை,'' என்றார்.