/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை தொழிலாளர் சம்பளப் பேச்சு எப்போது?
/
பின்னலாடை தொழிலாளர் சம்பளப் பேச்சு எப்போது?
ADDED : நவ 02, 2025 11:09 PM
திருப்பூர்: தொழிற்சங்கங்களின் நினைவூட்டல் கடிதத்தை தொடர்ந்து, விரைவில் குழு அமைத்து, பின்னலாடை தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படுமென, என, தொழில் அமைப்புகள் சார்பில் தெரிவித்துள்ளது.
திருப்பூரில், 1,500க்கும் அதிகமான ஏற்றுமதி நிறுவனங்கள், 2,500க்கும் அதிகமான உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், 350க்கும் அதிகமான சாய ஆலைகள், 400க்கும் அதிகமான நிட்டிங் நிறுவனங்கள், 250க்கும் அதிகமான பிரின்டிங் நிறுவனங்கள் என, ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
பின்னலாடை தொழிலில், தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களும், 19 வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். பின்னலாடை தொழிலாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்(டீ), தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), பின்னல்துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா), திருப்பூர் ஏற்றுமதியtளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா), தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம் (சிம்கா), திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (டெக்மா) ஆகிய தொழில் அமைப்புகள்; சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எல்.பி.எப்., - எம்.எல்.எப்., - எச்.எம்.எஸ்.,- ஏ.டி.பி., - ஐ.என்.டி.யு.சி., மற்றும் பி.எம்.எஸ்., ஆகிய தொழிற்சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் உருவாக்குவது வழக்கம். கடந்த, 2021ம் ஆண்டு , 32 சதவீத சம்பள உயர்வு வழங்கிய ஒப்பந்தம், கடந்த செப்., 30 ம் தேதியுடன் காலாவதியானது.
அமெரிக்கா வரி உயர்வு
ஒப்பந்தம் காலாவதியாகும் முன்பே பேச்சுவார்த்தையை துவக்கி, விரைவாக சம்பள உயர்வு வழங்க, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. எதிர்பாராத வகையில், அமெரிக்க வரி உயர்வு பிரச்னை எழுந்தது; தீபாவளி போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது. இதனால், தொழிற்சங்கங்கள் தொழில் அமைப்புகுளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்த்தன.
தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில், கடந்த வாரம், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது. அதன்படி, தொழில் அமைப்புகளின் செயற்குழு கூடி, இதுதொடர்பாக விவாதிக்க உள்ளதாகவும், பேச்சுவார்த்தையை துவக்குவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும், தொழில் அமைப்புகள் தரப்பு தெரிவித்துள்ளது.

