அமராவதி ஆற்றில் நீர் திறப்பது எப்போது? ராஜவாய்க்கால்கள் சங்க கூட்டமைப்பு தீர்மானம்
அமராவதி ஆற்றில் நீர் திறப்பது எப்போது? ராஜவாய்க்கால்கள் சங்க கூட்டமைப்பு தீர்மானம்
ADDED : ஆக 27, 2026 06:22 PM
உடுமலை: அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, ஆற்று மதகு வழியாக நீர் திறக்க வேண்டும் என, அமராவதி எட்டு ராஜவாய்க்கால் சங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஜூன் முதல் வாரமும், புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, ஆக.,மாதமும் தண்ணீர் திறக்கப்படும்.
நடப்பாண்டு, கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவ மழைகள் ஏமாற்றி வருவதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழையின்றி, அணைக்கு நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், அணையிலிருந்து குறிப்பிட்ட காலத்தில் பாசனத்திற்கு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் தொடர் கோரிக்கை மற்றும் போராட்டங்கள் அடிப்படையில், அமராவதி அணை பழைய பாசனத்திற்குட்பட்ட முதல் எட்டு பழைய ராஜவாய்க்கால்களான, ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு ஆகிய வாய்க்கால்களுக்குட்பட்ட, 7,520 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன.
குறுவை பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், கடந்த ஜூலை, 27 முதல், வரும் டிச.,3ம் தேதி வரை, 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில், வினாடிக்கு 300 கனஅடி வீதம், 2073.60 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் அமராவதி அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக நீர் திறக்கப்பட்டது.
அதே போல், உடுமலை, மடத்துக்குளம், தாலுகாவிலுள்ள புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, ஜூலை 27 முதல், ஆக.,5 வரை, 15 நாட்களுக்கு வினாடிக்கு, 440 கனஅடி வீதம் 570.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றும் வகையில் சிறப்பு நனைப்புக்கும் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும், அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
ஆனால் ,கரூர், தாராபுரம் பகுதி குடிநீர் தேவைக்காக, அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதால், தொடர்ந்து பாசன நிலங்களுக்கு நீர் வழங்க முடியாமல், ஒரு வாரத்தில் அணை காலியானது.
அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நீர் வரத்து அதிகரித்தது. இதனால், ஆற்றில் பாசனத்திற்கும், பிரதான கால்வாயில் உயிர்த்தண்ணீரும் நீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், நீர் திறக்கவில்லை.
இந்நிலையில், பழைய ஆயக்கட்டு எட்டு ராஜவாய்க்கால் பாசன சங்களின் கூட்டமைப்பு கூட்டம், மடத்துக்குளம் கணியூரில் நடந்தது. தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். கால்வாய் பாசன சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில், அமராவதி அணையின் நீர்ப்பங்காற்று விதிகளின் அடிப்படையில், அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, வினாடிக்கு, 700 கனஅடி நீர் திறக்க வேண்டும். வரும் காலங்களில், ஆற்றில் நீர் திறக்கும் போது, எட்டு ராஜவாய்க்கால்களிலும் உயிர்த்தண்ணீரும், நீர் இருப்பை பொருத்து பாசனத்திற்கும் நீர் திறக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
