/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை - சேலம் மெமு ரயில் எப்போது இயங்கும்?
/
கோவை - சேலம் மெமு ரயில் எப்போது இயங்கும்?
ADDED : ஜன 05, 2025 02:09 AM
திருப்பூர்: கோவை - சேலம் மெமு ரயில் எப்போது இயக்கப்படும் என்று பயணிகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
கரூரில் இருந்து திருச்சிக்கு வாரத்தின் ஆறு நாட்கள் (ஞாயிறு தவிர) மெமு ரயில் (எண்:06116) அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் இரவு, 08:05க்கு புறப்படும் ரயில் மகாதானபுரம், குளித்தலை, பெட்டவாய்த்தலை, திருச்சி கோட்டை ஸ்டேஷன்களில் நின்று, திருச்சிக்கு இரவு, 10:50க்கு சென்று சேர்கிறது.
மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து, அதிகாலை 5:25க்கு புறப்படும் ரயில் (எண்:06115) கரூருக்கு காலை, 7:20 க்கு வரும். ஐந்து பொது பெட்டிகளோடு, இருபுற இன்ஜின் அமைப்புடன் இந்த ரயில் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்த முறையில், மார்ச், 31 வரை ரயில் இயங்க உள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில், சேலம் - கோவை இடையே மெமு ரயில் பத்து ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. எட்டு பெட்டிகளுடன் இயங்கி வந்த இந்த ரயிலில், தினசரி, 750 முதல், 850 பேர் பயணித்து வந்தனர். மாதாந்திர பாஸ் பெற்று, 500 க்கும் மேற்பட்டோர் பயணித்து வந்தனர்.
ஊரடங்கின்போது 2020ல் நிறுத்தப்பட்ட ரயில் இயக்கம் இன்னும் துவங்கப்படவில்லை. கோவை - சேலம் மெமு ரயில் மீண்டும் இயக்கத்துக்கு ஒப்புதல் தர வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

