/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் எதிர்பார்ப்பு பூர்த்தியாவது எப்போது?
/
விவசாயிகள் எதிர்பார்ப்பு பூர்த்தியாவது எப்போது?
ADDED : பிப் 05, 2025 12:30 AM
திருப்பூர; வேளாண் மற்றும் உழவர் நலத்துறை ஆணையர் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள, 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' நடைமுறைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு வேளாண் துறையினர் மற்றும் விவசாயிகள் மத்தி யில் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் வேளாண் அமைச்சகம் சார்பில், 2023ல் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த அனைத்து துறைகளையும் ஒரே துறையின் கீழ் இணைக்க திட்டமிடப்பட்டது.
கடந்த, 2023 மார்ச் மாத பட்ஜெட்டில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' கொண்டு வரப்படும் என, வேளாண் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில், 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமிக்கப்படுவார். பயிர் சாகுபடி, விவசாயிகளுக்கான ஆலோசனை, தொழிற்நுட்ப பயிற்சி என அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பயிர் வளர்ச்சிக்குரிய முழுப்பொறுப்பையும் அந்த அலுவலர் ஏற்க வேண்டும் என்பது போன்ற பல வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருந்தது; ஆனால், இத்திட்டம் இதுவரைஅமலுக்கு வரவில்லை.
வேளாண் துறையினர் கூறியதாவது:
'வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை பொருத்தவரை, களப்பணியில் ஈடுபடும் அலுவலர்களை விட, மேற்பார்வை செய்யும் நிலையிலான அதிகாரி பதவிகள் தான் அதிகம். 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' நடைமுறைக்கு வந்தால், அதிகளவிலான அதிகாரி நிலையிலான பணியிடங்கள் ரத்தாகும் நிலை ஏற்பட்டது. பணியிடங்களை பாதுகாக்கும் நோக்கில், உயரதிகாரிகள் தான் இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.
குறிப்பாக, தோட்டக்கலை துறையினர் தான் இத்திட்டத்துக்கு தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது, விவசாயிகளின் எதிர்பார்ப்பு. இந்நிலையில், வேளாண் உற்பத்தி கமிஷனர் மற்றும் உழவர்கள் முன்னேற்றத்துறை செயலாளராக தட்சிணாமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே, வேளாண் துறை இயக்குனராக பொறுப்பு வகித்தவர்.
வேளாண்மை சார்ந்த களப்பணியில் உள்ள சவால்கள், அதற்கான தீர்வுகளை நன்கறிந்தவர். அதோடு, இயக்குனர் பதவியில் இருந்த போது, 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 கொண்டு வர 'பச்சைக்கொடி' காண்பித்திருந்தார்.
இந்நிலையில், அவரே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அத்திட்டத்தை கொண்டு வர முயற்சி மேற்கொள்வார் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.