/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ரயில்வே கேட்'டில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நிரந்தர தீர்வு எப்போது?
/
'ரயில்வே கேட்'டில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நிரந்தர தீர்வு எப்போது?
'ரயில்வே கேட்'டில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நிரந்தர தீர்வு எப்போது?
'ரயில்வே கேட்'டில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நிரந்தர தீர்வு எப்போது?
ADDED : ஜன 02, 2025 12:28 AM

உடுமலை,; ராமசாமி நகர் ரயில்வே கேட் பகுதியில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் பிரச்னைக்கு, எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக அரசு கலைக்கல்லுாரி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அதிகளவு வாகனங்கள் செல்கின்றன.
இதில், உழவர் சந்தை தாண்டியதும், அகல ரயில்பாதை குறுக்கிடுகிறது. அங்குள்ள ரயில்வே கேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில், அதிகளவு நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
உழவர் சந்தை சந்திப்பில் இருந்து ரயில்வே கேட் வரை, வரிசையாக தள்ளுவண்டி கடைகள் அமைத்துள்ளனர்; கேட் தாண்டியதும், ராமசாமிநகர் ரோடு சந்திப்பு துவங்கும் இடத்திலும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.
இதனால், ரயில்வே கேட் மூடப்படும் போது, இரு புறமும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் செல்வதற்கு போதிய இடமில்லாமல், அதிகளவு நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது; விபத்துகளும் ஏற்படுகிறது.
தொடர்கதையாக உள்ள இப்பிரச்னைக்கு நகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளிட்ட எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அகல ரயில்பாதையில், ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒவ்வொரு ரயில் கடக்கும் போதும், நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. குறுகலாக உள்ள இடத்தில், வாகன ஓட்டுநர்கள் போட்டி போட்டு, கடக்க முயல்வதால், விபத்துகளும் ஏற்படுகிறது.
மக்கள் கூறுகையில், 'உழவர் சந்தை தாண்டியதும், உயர் மின் விளக்கு கோபுரத்தை ஒட்டியுள்ள சந்திப்பிலும், ரயில்வே கேட் ரோட்டிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. ரோடு மிக குறுகலாக மாறியுள்ளது குறித்து ஆய்வு செய்து, முறைப்படுத்த வேண்டும். ரயில்வே கேட் பகுதியில், பாலம் கட்டுதல் உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,' என்றனர்.