ADDED : ஜன 05, 2025 02:10 AM

''மனிதன் இல்லாத உலகில் பறவைகளும், விலங்குகளும் உயிர் வாழும். ஆனால், பறவைகளும், விலங்குகளும் இல்லாத உலகில், மனிதன் ஒருபோதும் உயிர் வாழ முடியாது'' என்கிறார் பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலி.
இது வெறும் வார்த்தை ஜாலத்துக்காக அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. தனது, 50 ஆண்டுகால பறவை ஆராய்ச்சியின் அனுபவத்தில் உதிர்த்த வார்த்தைகள் தான்.காடு, மலை, மேடெல்லாம் பறந்து திரிந்து, உண்ணும் பல வகை பழங்களின் விதைகளை, தனது எச்சத்தின் வாயிலாக வெளியேற்றி, மண்ணில் விதைக்க செய்கின்றன பறவைகள்; இவை, குறு மற்றும் பெருங்காடுகளாக உருவெடுக்கின்றன; காடுகளில் வானுயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்கள், மழை வளம் தருகின்றன.
பறவைகளின் முக்கியத்துவம் உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும், ஜன., 5ம் தேதி, 'தேசிய பறவைகள் தினம்' கொண்டாடப்படுகிறது, இந்தாண்டின் கருப்பொருள் 'பறவைகளை பாதுகாப்போம்; எதிர்காலம் காப்போம்' என்பது.
காடுகளும், மலைகளும் நிறைந்த பகுதியில் தான், பறவைகள் குறித்த பேச்சும் அதிகமாக இருக்கும் என்ற மாறி, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் கூட, பறவைகள் மீதான பாசமும், நேசமும் அதிகரித்து வருகிறது. காகம், குருவி, மைனா, புறா என, பார்வைக்கு பரிச்சயமான பறவைகள் மட்டுமின்றி, வெண்முகுது சில்லை, கருங்கரிச்சான், சின்னான், சாம்பல் தலை வானம்பாடி, கொண்டலாத்தி, நீல செம்பகம், வல்லுாறு, வானம்பாடி என, ஏராளமான பறவைகள், திருப்பூர் நகரில் பார்க்க முடிகிறது.
- இன்று (ஜன., 5)
பறவைகள் தினம்