/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓடை துார்வாரும் பணியில் ஓரவஞ்சனை எதற்கு?
/
ஓடை துார்வாரும் பணியில் ஓரவஞ்சனை எதற்கு?
ADDED : நவ 16, 2025 12:17 AM
திருப்பூர்: ஜம்மனை ஓடை துார் வாரும் பணி முழுமையாக மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதை முறையாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் நொய்யல் ஆற்றுக்கு சென்று சேரும் ஓடைகளில் முக்கியமானதாக ஜம்மனை ஓடை உள்ளது. நகரின் தெற்கு மற்றும் பல்லடம் வட மேற்கு பகுதியில் சிறு ஓடை மற்றும் பள்ளங்கள் இணைந்து இந்த ஜம்மனை ஓடை உருவாகி திருப்பூர் நகரில் நுழைந்து மங்கலம் ரோட்டைக் கடந்து நொய்யல் ஆற்றில் சேருகிறது.
இந்த ஓடையில் மழை நாட்களில் அதிகளவில் மழை நீர் சேகரமாகிறது. நகரில் பல பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீர் இதில் இணைந்து பெருகி வந்து நொய்யலில் சேருகிறது.
ஆண்டு முழுவதும் கழிவு நீர் மற்றும் மழை நீர் பாய்ந்து செல்லும் நிலையில் இந்த ஓடையும், அதன் கரைகளும் பெருமளவு மண் மேடுகளும், செடிகள் வளர்ந்தும், முட்புதர்கள் மண்டியும் காட்சியளிப்பது வழக்கம்.
இது போன்ற ஆக்கிரமிப்பு காரணமாக ஓடையில் மழை காலங்களில் நீர் செல்வது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, தாழ்வான பகுதிகளில் சென்று பாய்வதும் வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள ஓடையில் துார் வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வகையில், நடப்பாண்டும் இந்த ஓடையில் துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. நொய்யல் பகுதியிலிருந்து தெற்கு நோக்கி இப்பணி நடந்தது. இதில், தென்னம்பாளையம் பகுதி வரை ஓடை துார் வாரி சுத்தம் செய்யப்பட்டது. தென்னம்பாளையம் பகுதியைக் கடந்து மேலும் இந்த ஓடை துார்வாராமல் புதர் மண்டிக் கிடக்கிறது.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'ஆண்டுதோறும் ஓடை துார் வாரப்படுகிறது. ஆனால், இப்பகுதியில் பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ளது. இதனால், இப்பகுதியைக் கடந்து மழை நீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஓடை முழுமையாக துார் வாரினால் மட்டும் இப்பணி பயன் தருவதாக இருக்கும்,' என்றனர்.

