/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத்தேர்வில் சாதிக்க கல்வித்துறை முனைப்பு நம் மாவட்டம் மீண்டும் முதலிடம் பெறுமா?
/
பொதுத்தேர்வில் சாதிக்க கல்வித்துறை முனைப்பு நம் மாவட்டம் மீண்டும் முதலிடம் பெறுமா?
பொதுத்தேர்வில் சாதிக்க கல்வித்துறை முனைப்பு நம் மாவட்டம் மீண்டும் முதலிடம் பெறுமா?
பொதுத்தேர்வில் சாதிக்க கல்வித்துறை முனைப்பு நம் மாவட்டம் மீண்டும் முதலிடம் பெறுமா?
ADDED : ஜூன் 06, 2025 11:57 PM

திருப்பூர்; பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விட்ட இடத்தை பிடிக்க தேவையான முயற்சிகளை கல்வியாண்டு துவக்கத்தில் இருந்தே, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த, 2024ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற திருப்பூர் மாவட்டம், 2025ல் இரண்டு இடங்கள் சறுக்கி, மூன்றாமிடம் பெற்றது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 21வது இடம் பெற்ற திருப்பூர், நான்கு இடங்கள் முன்னேறி, 17வது இடம் பெற்றது. நான்கு இடங்கள் முன்னேற்றம் என்றாலும், முதல் பத்து இடங்களுக்குள் திருப்பூர் வரவில்லையே என்ற ஆதங்கம் மாவட்ட கல்வித்துறைக்கு உள்ளது.
வரும், 2025 - 2026ம் கல்வியாண்டில் சிறந்த தேர்ச்சியை திருப்பூர் பெற மாவட்ட கல்வித்துறை இப்போதிருந்தே தயாராக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து கூறியதாவது:
அதிகளவு மாணவ, மாணவிகள் கொண்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு சென்று, அட்மிஷன், பாடப்பிரிவுகள் எப்படி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் நடைபெற உள்ள தலைமையாசிரியர் ஆலோசனை கூட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் இணைந்துள்ளவர்கள் விபரம் கேட்கப்பட உள்ளது.
அந்தந்த பள்ளியில் படித்தவர்கள், வேறு பள்ளிகளில் இருந்து வந்தவர்கள், என்ன மதிப்பெண் பெற்று வந்துள்ளார்கள் என்பது குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப திட்டமிடல் இருக்கும். கடந்த முறை பிளஸ் 2வில் விட்ட முதலிடத்தை பிடிக்க தேவையான செயல்பாடுகள் முதல்பருவ தேர்வுக்கு முன்னதாக துவங்கும்.
பத்தாம் வகுப்பை பொறுத்தவரை மெல்ல கற்கும் மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் எப்படி படித்தார்கள் என்பதை பொறுத்து பகுப்பாய்வு செய்து அதற்கேற்ப பாடங்களை நடத்த ஆசிரியர், தலைமை ஆசிரியர் தயார்படுத்தப்படுவர். முதல் பத்து இடங்களுக்குள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் துவங்கப்படும்.
இவ்வாறு, காளிமுத்து கூறினார்.