ADDED : டிச 23, 2024 11:57 PM
வணிக கட்டட வாடகை ஜி.எஸ்.டி., ரத்தானது போல், சொத்து வரி உயர்வும் குறைந்தால் வணிகர்கள் மற்றும் தொழில்துறையினரின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
தமிழக அரசு மின் கட்டணங்களை உயர்த்தியதால், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி போராட்டம் வெடித்தது. அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை. பலகட்ட போராட்டத்துக்கு பிறகு, உச்சநேர (பீக் ஹவர்) மின் பயன்பாட்டு கட்டணம் உள்ளிட்ட, கோரிக்கைகளை நிறைவேற்றியது. பிரதான கோரிக்கையாக இருந்த, நிலை கட்டண உயர்வின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
மின்கட்டண உயர்வை சுமக்க முடியாத தொழில்துறைக்கு, சொத்துவரி உயர்வும், வாடகையில், 18 சதவீத ஜி.எஸ்.டி.,யும் கடும் பேரிடியாக தலையில் இறங்கியது. சொத்துவரி மற்றும் ஜி.எஸ்.டி.,க்கு எதிராக, வணிகர்கள் போராட்டத்தில் இறங்கினர். தமிழக அரசும், ஜி.எஸ்.டி., கவுன்சிலில் வலியுறுத்தியதால், வாடகைக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கும் முடிவை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த தொழில்துறையும், வணிகர்கள் மற்றும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநில அரசும் மின் கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வை குறைத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
கட்டட வாடகைக்கு, ஜி.எஸ்.டி., 18 சதவீதம் விதித்தால், பாதிப்பு ஏற்படுமென ஆட்சேபனை தெரிவித்திருந்தோம். எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு அதன்படி, வரி விதிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தொழில்துறையினருக்கு சவாலாக இருப்பது, மின் கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வு பிரச்னைதான். மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது போல், தமிழக அரசும் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். ஜவுளித்தொழில் வெளிமாநிலங்களுக்கு நகர்ந்து செல்வதை தடுக்க வேண்டும். அபரிமித மின் கட்டண உயர்வையும், சொத்துவரி உயர்வையும் திரும்பப் பெற வேண்டும். தொழில்துறையினர் மற்றும் மக்கள் பிரச்னைகள், மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவதில்லை. அதிகாரிகள் தவறாக வழி நடத்துவதால், மக்களின் பாதிப்பு அரசுக்கு தெரிவதில்லை. முதலில், நமது பாதிப்புகளை அரசுக்கு உணர்த்திட வேண்டும்.
- முத்துரத்தினம், தலைவர், அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு