/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டத்தில் பாலிதீன் தடை முழுமையாக அமலாகுமா?
/
மாவட்டத்தில் பாலிதீன் தடை முழுமையாக அமலாகுமா?
ADDED : டிச 28, 2025 07:01 AM
திருப்பூர்: திருப்பூரில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்த வழி தெரியாமல், மாநகராட்சி நிர்வாகம் விழிபிதுங்கியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஒருமுறை பயன்பாட்டுக்கான பாலிதீன் பை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி, மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. பாலிதீன் கேரி பேக் விற்பனை செய்வோர் கண்காணிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.
மாநகரையொட்டி ஏராளமான கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில், மாநகராட்சி சார்பில் பாலிதீன் கேரி பைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை, மாவட்டம் முழுக்க உள்ள ஊராட்சிகளுக்கும் விதிக்க வேண்டும்; அவ்வாறு செய்தால் மட்டுமே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முழுமை பெறும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.
முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவை சேர்ந்த வேலுசாமி கூறுகையில், ''திருப்பூர் மாவட்டம் முழுக்க பாலிதீன் கேரி பை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன்படி, முதலிபாளையம் ஊராட்சியுடன் இணைந்து, பாலிதீன் தவிர்ப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாக, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் நடத்தி, ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
திருப்பூரில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்துடன் மாநகராட்சி சுகாதார பிரிவினர் இணைந்து பாலிதீன் பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். இரு தரப்பினரும் இணைந்து இரு நாட்கள் நகரப் பகுதியில் உள்ள கடைகளில் மண்டல வாரியாக ஆய்வு நடத்தினர்.
மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளர் லாவண்யா, உதவி பொறியாளர்கள் ஆதவன், சங்கர் நாராயணன், மதன கீர்த்தி, மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள், கோகுல்நாதன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட குழு வினர், பாலிதீன் விற்பனை தொடர்பாக கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், நான்கு மண்டலங்களிலும், 66 கடைகளில் ஆய்வு நடந்தது.
தடை செய்யப்பட்ட, ஒரு முறை பயன்படுத்தும் பாலிதீன் கவர்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த, கடைகளுக்கு மொத்தம் 64 ஆயிரம் ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டு, 367 கிலோ பாலிதீன் கவர்கள் பறிமுதல் செய்து, மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

