/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னவெங்காயத்தின் விலை நிலவரம் நுாறை தொடுமா? சாகுபடி குறைவு; இருப்பு அதிகரிப்பு
/
சின்னவெங்காயத்தின் விலை நிலவரம் நுாறை தொடுமா? சாகுபடி குறைவு; இருப்பு அதிகரிப்பு
சின்னவெங்காயத்தின் விலை நிலவரம் நுாறை தொடுமா? சாகுபடி குறைவு; இருப்பு அதிகரிப்பு
சின்னவெங்காயத்தின் விலை நிலவரம் நுாறை தொடுமா? சாகுபடி குறைவு; இருப்பு அதிகரிப்பு
ADDED : அக் 30, 2025 11:10 PM

உடுமலை:  பருவமழை சீசனுக்கு பிறகு விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில், உடுமலை சுற்றுப்பகுதிகளில், சின்னவெங்காயத்தை விவசாயிகள் அதிகளவு இருப்பு வைத்துள்ளனர்; உள்ளூர் சந்தைகளில், தற்போதே வரத்து குறைந்து, விலை அதிகரிக்க துவங்கியுள்ளது .
உடுமலை, குடிமங்கலம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு இரு சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக, 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் வகையில், நாற்று நடவு செய்து, சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு பிடிப்பதால், அறுவடையின் போது ஏற்படும் விலை சரிவு விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது.
எனவே, சில ஆண்டுகளாக, அறுவடை காலத்தில், சந்தை நிலவரம் அடிப்படையில், விற்பனையை விவசாயிகள் தீர்மானிக்கின்றனர். விளைநிலங்களில் 'பட்டறை' அமைத்து சின்னவெங்காயத்தை இருப்பு வைக்கின்றனர்.
தற்போது உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், அதிகளவு சின்னவெங்காயம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.செப்., மாதத்தில் சீராக விற்பனை செய்யப்பட்ட இதன்  விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
இவ்வாரத்தில், உடுமலை உழவர் சந்தையில், கிலோ சின்னவெங்காயம், 50-60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பருவமழை சீசன் துவங்க உள்ள நிலையில், வரத்து குறைந்து, விலை கிலோ நுாறு ரூபாயை தொடும் வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'ஐப்பசி மாத முகூர்த்த சீசனில், தேவை அதிகரித்து, காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரிக்கும். இந்த சீசனில், சின்னவெங்காயம் உட்பட காய்கறிகள் விலை நிலையாக இருக்க, அச்சாகுபடிக்கான உதவிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்,' என்றனர்.
சாகுபடிக்கு ரூ.60 ஆயிரம் செலவு
 விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கரில், சின்னவெங்காயம் சாகுபடி செய்ய, 60 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. சீரான பாசனம், நல்ல பராமரிப்பு இருந்தால் ஒரு ஏக்கர் பரப்புக்கு குறைந்தபட்சம் 5 டன் முதல் அதிகபட்சம் 7 டன் வரை மகசூல் கிடைக்கும்.
ஒவ்வொரு அறுவடை சீசனிலும், சிறு வியாபாரிகள், இடைத்தரகர்கள், மொத்தமாக கொள்முதல் செய்து, இருப்பு வைத்து, பதுக்குகின்றனர். தட்டுப்பாடு அதிகரிக்கும் போது, இருப்பை சந்தைக்கு, விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இத்தகைய நடைமுறையால், விளைவிக்கும் விவசாயிக்கும் பலனில்லை. எனவே, விவசாயிகளே ஒருங்கிணைந்து ஆங்காங்கே விளைநிலங்களில் சின்னவெங்காயத்தை இருப்பு வைத்துள்ளோம். வரும் வாரங்களில் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சில விவசாயிகள் விதை தேவைக்காகவும் இருப்பு செய்துள்ளனர். சின்னவெங்காயத்தை இருப்பு வைக்க, வட்டார வாரியாக அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்குகளை அமைத்தால், விவசாயிகள் பாதிப்பது தவிர்க்கப்படும்; சாகுபடி பரப்பு அதிகரித்து நுகர்வோருக்கும் நிலையான விலையில் சின்னவெங்காயம் கிடைக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
பல்வேறு காரணங்களால், அனைத்து பகுதிகளிலும் சின்னவெங்காய சாகுபடி பரப்பு குறைந்துள்ளது விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. சாகுபடியில் நிலவும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

