/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்நிலைகளில் சீமைகருவேல மரங்கள் அகற்றப்படுமா? நிலத்தடி நீர் மட்டம் சரிவால் கவலை
/
நீர்நிலைகளில் சீமைகருவேல மரங்கள் அகற்றப்படுமா? நிலத்தடி நீர் மட்டம் சரிவால் கவலை
நீர்நிலைகளில் சீமைகருவேல மரங்கள் அகற்றப்படுமா? நிலத்தடி நீர் மட்டம் சரிவால் கவலை
நீர்நிலைகளில் சீமைகருவேல மரங்கள் அகற்றப்படுமா? நிலத்தடி நீர் மட்டம் சரிவால் கவலை
ADDED : மார் 30, 2025 10:39 PM
குடிமங்கலம்; குடிமங்கலம் ஒன்றியத்தில், நீர் நிலைகளில், சீமை கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன; சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த மரங்களை, வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், 17,761 ஏக்கர், ஆழ்குழாய் கிணறு வாயிலாக, 7,442 ஏக்கர், கிணற்று பாசனத்தில், 14,131 ஏக்கரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்றுப்பாசனத்துக்கு, நிலத்தடி நீர்மட்டமே முக்கிய ஆதாரமாக உள்ளது. ஆறு, சிற்றாறுகள் எதுவும் இல்லாத இப்பகுதியில், பருவமழைக்காலங்களில், உப்பாறு ஓடையில், செல்லும் தண்ணீரை தேக்கி வைப்பதே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு உள்ள ஒரே வாய்ப்பாகும்.
மழை குறைவு
குடிமங்கலம் பகுதியின் சராசரி மழையளவு, 681 மி.மீ., மட்டுமே ஆகும். இதில், வடகிழக்கு பருவமழையால், 70 சதவீதம், 18 சதவீதம் கோடை மழை, 12 சதவீதம், தென்மேற்கு பருவமழையாகவும் கிடைக்கிறது.
பருவமழை குறையும் காலங்களில், அப்பகுதியில், கடும் வறட்சி ஏற்பட்டு, பல ஆண்டுகள் வளர்த்த தென்னை மரங்கள் கருகுகின்றன.
கடந்த 2002-2004, 2012-14 ஆண்டுகளில், போதிய மழை இல்லாமல், வறட்சி ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் மீண்டும் காய்ப்புத்திறனுக்கு திரும்ப, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகும். எனவே, நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டிய நிலை குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்ளது.
இந்த ஒன்றியத்தில், முக்கிய நீராதாரமாக, உப்பாறு ஓடை உள்ளது. இந்த ஓடை தாராபுரம் தாலுகாவிலுள்ள, உப்பாறு அணைக்குச்செல்கிறது. மழைக்காலங்களில் மட்டும் நீர் வரத்து உள்ள இந்த ஓடைகள் முறையான பராமரிப்பு இல்லாமல், பரிதாப நிலையில் உள்ளது.
ஓடையின் கரைகள் முழுவதும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்த மரங்கள், அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சுவதுடன், அதிக வெப்பத்தையும் வெளிவிடுவதால், மழைக்காலங்களில் ஓடையில் செல்லும் தண்ணீர் விரைவாக காணாமல் போய்விடுகிறது.
பல்வேறு இடங்களில், கட்டப்பட்ட தடுப்பணைகளிலும், தண்ணீர் தேங்குவதில்லை. எனவே, குடிமங்கலம் பகுதியில், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
சீமை கருவேல மரங்களை அகற்ற, பல்வேறு உத்தரவுகளை அரசு வெளியிட்டாலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் பொதுப்பணித்துறையினர், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை, பயன்படுத்தி, ஓடை பகுதியிலுள்ள சீமை கருவேல மரங்களை, அகற்ற உத்தரவிட வேண்டும்.
தென்மேற்கு பருவமழை துவங்கும் முன், இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே போல் கிராமப்புறங்களில், ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குளங்களிலும் சீமை கருவேல மரங்கள் பரவல் அதிகரித்துள்ளது.
கடந்த வடகிழக்கு பருவமழை சீசனுக்கு பிறகு, பல குளங்களின் கரைகளிலும், நீர் தேக்க பகுதியிலும் இவ்வகை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. அவற்றை அகற்றவும் நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.