/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீருமா மாணவ, மாணவியர் பஸ் பிரச்னை?
/
தீருமா மாணவ, மாணவியர் பஸ் பிரச்னை?
ADDED : ஜூன் 02, 2025 06:24 AM
திருப்பூர் : பள்ளி நேரத்துக்கு பஸ் இயக்கம், மாணவ, மாணவியரை அழைத்து வருவது, பஸ்களை ஸ்டாப்பில் நிறுத்தி இயக்குவது, மாணவர் பொறுமையுடன் பஸ் ஏறுவது, இறங்குவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டால், சிரமங்களை தவிர்க்க முடியும்; பெற்றோர்களின் ஒத்துழைப்பும் முக்கியம்.
ரயில்வே ஸ்டேஷன், புஷ்பா ரவுண்டானா, வீரபாண்டி பிரிவு, 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், பெருமாநல்லுார் ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட், காங்கயம் ரோடு, சி.டி.சி., கார்னர், மங்கலம், தாராபுரம் ரோடு ஐ.டி.ஐ., ஸ்டாப் உள்ளிட்டவை, திருப்பூரில் அதிகளவில் மாணவ, மாணவியர் நின்று பஸ் ஏறும் ஸ்டாப்களாக உள்ளன.
இவை நகரின் முக்கிய சந்திப்புகளில் வருவதால், பஸ் நிறுத்த வேண்டிய இடங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் டவுன் பஸ்களில் எல்.எஸ்.எஸ்., தாழ்தள சொகுசு பஸ்கள் இல்லாததால், அனைத்து பஸ்களும் அனைத்து ஸ்டாப்களிலும் நின்று செல்ல வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர் பஸ் ஏற காத்திருக்கும் போது, பஸ்கள் ஸ்டாப்பில் சரிவர நிற்காமல், ஸ்டாப்புக்கு முன் அல்லது தள்ளி சென்று நிற்கும் குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆண்டும் உள்ளது.
தேவை ஒருங்கிணைப்பு
குறிப்பிட்ட சில பஸ் டிரைவர்களின் இத்தகைய செயல்பாடுகளால் ஒட்டுமொத்தமாக டிரைவர்கள் பெயர் கெடுகிறது. இதைத் தவிர்க்க பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து செல்லும் பஸ்கள் சரிவர ஸ்டாப்பில் நின்று செல்ல வேண்டும்.
மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிரைவர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுக்க வேண்டும். இதற்கு முன் இதே போன்ற நிகழ்வுகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், விதிமீறல் நடக்கிறது.
இதை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும். அதிகளவு மாணவ, மாணவியர் பஸ் ஏறி, இறங்கும் ஸ்டாப்பில் போலீசார் ஒருவரை பள்ளி வேளையில் நிற்க வைத்து, விதிமீறி பஸ் இயக்கும் டிரைவர்களை பிடித்து, அபராதம் விதிக்க வேண்டும்.
புரிந்து கொள்ள வேண்டும்
ஒரே நேரத்தில் ஒரு பஸ்சில், 40 முதல், 50 பள்ளி குழந்கைளை தான் அழைத்துச் செல்ல முடியும். அடுத்தடுத்து வரும் பஸ்களின் தான் மற்றவர்கள ஏறி வர வேண்டும். அதற்கேற்ப ஸ்டாப்பில் வரிசையில் நிற்கும் பழக்கத்தை மாணவ, மாணவியர் கற்றுக்கொள்ள வேண்டும்.
பெற்றோர் வீட்டில், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பள்ளியிலும் இது குறித்து மாணவ, மாணவியருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பஸ் ஏற, பஸ் விட்டு இறங்கி பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியரும் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டாப்பில் நிற்காமல் செல்லும் பஸ்கள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் உதவி எண்களை வெளியிட வேண்டும்.
ஆராய்வது அவசியம்
கடந்த ஐந்து ஆண்டுகள் முன் பஸ் இயக்கம் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே இன்னமும் பஸ் இயக்கம் உள்ளது. புதிதாக விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கு பஸ் இயக்கம் குறித்து போக்குவரத்து கழகம் ஆராயவில்லை. புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்கத்தை ஒரு காரணமாக காட்டி, பல வழித்தடங்களில் புதிய பஸ் இயக்கம் தடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருந்தாலும், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு தகுந்த பஸ் வசதி மாவட்டம் முழுதும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கிடைத்துள்ளதா, இன்னமும் பஸ் இல்லாமல் நடந்து, வாகனங்களில் வந்து சேர வேண்டிய நிலை எத்தனை மாணவருக்கு உள்ளது என்பதை போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆராய வேண்டும். தேவைகள் உள்ள பகுதியில் பஸ் இயக்கத்தை துவங்க வேண்டும்.