ADDED : செப் 28, 2025 08:05 AM

பொங்கலுார் : வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
இருக்கும் தண்ணீரை வைத்து விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர். சாகுபடி பரப்பு குறைந்ததால், இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், பெரிய வெங்காயத்தின் விலை மிகவும் சரிந்துள்ளது. இதனால், அறுவடை தீவிரமடைந்த உடன் சின்ன வெங்காயம் பெரிய அளவில் விலை உயரவில்லை.
ஏற்றுமதி தரமான வெங்காயம் அதிகபட்சமாக கிலோ, 45 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள முக்கால் பங்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு உகந்ததாக இல்லை. இதை உள்ளூர் சந்தையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. உள்ளூர் சந்தையில் குறைந்தபட்சம் கிலோ, 20 ரூபாய்க்கும் அதிகபட்சம், 40 ரூபாய்க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
விற்பனை விலைக்கும், உற்பத்தி விலைக்கும் வித்தியாசம் இருப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை தவிர்க்க விவசாயிகள் திறந்தவெளியில் பட்டறை அமைத்து இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். விரைவில், தசரா மற்றும் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.