/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிதாக தீயணைப்பு நிலையம் உருவாக்காமல்... இதிலும் அலட்சியமா?மடத்துக்குளம் தாலுகாவில் குமுறும் மக்கள்
/
புதிதாக தீயணைப்பு நிலையம் உருவாக்காமல்... இதிலும் அலட்சியமா?மடத்துக்குளம் தாலுகாவில் குமுறும் மக்கள்
புதிதாக தீயணைப்பு நிலையம் உருவாக்காமல்... இதிலும் அலட்சியமா?மடத்துக்குளம் தாலுகாவில் குமுறும் மக்கள்
புதிதாக தீயணைப்பு நிலையம் உருவாக்காமல்... இதிலும் அலட்சியமா?மடத்துக்குளம் தாலுகாவில் குமுறும் மக்கள்
ADDED : ஜூன் 23, 2024 11:47 PM

உடுமலை:மடத்துக்குளம் தாலுகாவுக்கு, புதிதாக தீயணைப்பு நிலையம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது; இரு தாலுகாவிலும் தீயணைப்பு பணியில் ஈடுபட, உடுமலை தீயணைப்பு மீட்பு நிலையத்திலும் போதிய வசதிகள் இல்லாத பிரச்னைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உடுமலையிலுள்ள தீயணைப்பு நிலையம், 1931ல், துவக்கப்பட்ட பழமையான தீயணைப்பு நிலையமாகும்.
தற்போது, இந்த தீயணைப்பு நிலையத்தினர், உடுமலை, மடத்துக்குளம் என இருதாலுகாவிலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம், 72 ஊராட்சிகள், 5 பேரூராட்சி, ஒரு நகராட்சி என பரந்து விரிந்த பரப்பளவில், தீயணைப்பு பணிகளில், ஈடுபட வேண்டியுள்ளது.
தென்னை நார் உற்பத்தி, நுாற்பாலை, தீவன உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகளும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய சாகுபடி பரப்பும் இரு தாலுகாவிலும் அமைந்துள்ளன.
திண்டுக்கல், கோவை மாவட்ட எல்லையில், பெரிய விபத்துகள் ஏற்படும் போதும், உடுமலையில் இருந்து தீயணைப்பு வாகனம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில், ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே உள்ளது.
நீண்ட தொலைவு தீயணைப்பு பணிகளுக்குச்செல்லும் போது, பிற பகுதிகளில் விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு வீரர்கள் திணற வேண்டியுள்ளது; காலதாமதம் ஏற்படுவதால், தீ விபத்தில் சேதமும் அதிகரிக்கிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு கூடுதல் வாகனம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமாகியுள்ளது.
மடத்துக்குளத்தில் என்னாச்சு
கடந்த, 2009ல் தாலுகாவாக மடத்துக்குளம் தரம் உயர்த்தப்பட்டது; தாலுகா அலுவலகம், கோர்ட் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டாலும், இன்னும், தீயணைப்பு நிலையம் உருவாக்கப்படவில்லை. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
உதாரணமாக நேற்று முன்தினம், மடத்துக்குளம் அரசு மருத்துவனையில், கரும் புகை எழுந்து, நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். உடுமலையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இத்தகைய அவசர மீட்பு தேவைகளின் போது, உடுமலையில் இருந்து வாகனம் வர அதிக நேரமாகிறது. இதனால், சேதம் அதிகரித்தல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
மடத்துக்குளம் தாலுகாவில், முக்கிய தேவையான தீயணைப்பு நிலையம் அமைப்பது நீண்ட காலமாக இழுபறியாக உள்ளது.
'இது குறித்து ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்குறுதி அளிக்கும் கட்சியினர், வெற்றிக்கு பிறகு கோரிக்கையை கண்டுகொள்வதில்லை. தீ விபத்தில், பொருட்சேதம், உயிர் சேதம் அதிகரிக்கும் முன் தீயணைப்பு நிலைய கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்,' என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மடத்துக்குளம் தாலுகாவில், அதிகரித்து வரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிதாக தீயணைப்பு நிலையம் உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளும் இப்பிரச்னை குறித்து அரசை வலியுறுத்தி, திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.