/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைச்சோறு எடுத்து பெண்கள் வழிபாடு
/
மழைச்சோறு எடுத்து பெண்கள் வழிபாடு
ADDED : செப் 30, 2025 11:56 PM
பொங்கலுார்; நடப்பாண்டில் கோடை மழை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. ஆடி, ஆவணி மாதத்தில் வெப்ப சலன மழை பெய்திருந்தால் விவசாயிகள் விதைப்பு பணியை துவக்கி இருப்பர்.
புரட்டாசி பிறந்தும் இன்னும் மழை பெய்யவில்லை. இதனால் கால்நடை தீவன தட்டுப்பாடு பூதாகரமாக உருவெடுத்துள்ளது. பல்லாண்டு தாவரங்களான தென்னை, பனை மரங்கள் கருகி வருகின்றன.
இதனால், நல்ல மழை வேண்டி பொங்கலுார், தங்காய்புதுாரை சேர்ந்த பெண்கள் ஒவ்வொருவரும் பழைய சோற்றை எடுத்துக்கொண்டு சென்று பிள்ளையார் கோவிலில் வழிபட்டனர்.
அதன்பின், தண்ணீர் இல்லாததால் ஊரை விட்டு செல்வதாக கூறி, ஒப்பாரி வைத்துக் கொண்டு ஊர் எல்லையை கடந்து சென்றனர்.
அவர்களை ஊர் பெரியவர்கள் தடுத்து, விரைவில் நல்ல மழை பெய்து நாடு செழிக்கும் என்று ஆறுதல் கூறி அழைத்தனர். அதன்பின், பழைய சோற்றை அனைவரும் அருந்தி பின் வீடு திரும்பினர்.