/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'யார்னெக்ஸ்' கண்காட்சி இன்று நிறைவு
/
'யார்னெக்ஸ்' கண்காட்சி இன்று நிறைவு
ADDED : செப் 27, 2025 12:08 AM

திருப்பூர்; திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான, 'யார்னெக்ஸ்' உள்ளிட்ட நான்கு வகையான கண்காட்சிகளும் இன்று நிறைவு பெறுகின்றன.
திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும், 'யார்னெக்ஸ்' என்ற நுாலிழைகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்தாண்டு, தொழில்துறையினருக்கும், நுால் உற்பத்தியாளருக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கும் வகையில், நான்கு கண்காட்சிகள், ஒரே இடத்தில் நடந்து வருகின்றன.
திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில் நடந்து வரும் இந்த கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது. நுால் உற்பத்திக்கு தேவையான 'பைபர்'கள், பருத்தி, பாலியஸ்டர், விஸ்கோஸ், கலப்பு நுாலிழைகள், 'பேன்ஸி' நுாலிழைகள், 'மிலாஞ்ச் உள்ளிட்ட நுாலிழைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆடை வடிவமைப்புக்கு தேவையான, பின்னல் துணிகள் மற்றும் நெசவு செய்யப்பட்ட துணி ரகங்கள், நீடித்த நிலையான மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகள் இடம் பெற்றுள்ள, 'டெக்ஸ் இந்தியா' கண்காட்சி.
ஜவுளி ரசாயனங்கள், சாயங்கள், துணைப்பொருட்கள், மற்றும் நீடித்து உழைக்கும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றுடன், 'டைகெம் டெக்ஸ் பிராசஸ் கண்காட்சி, ஆயத்த ஆடை உற்பத்திக்கான 'அப்பேரல் சோர்சிங்' கண்காட்சி என, நான்கு வகையான கண்காட்சி நடந்து வருகிறது. திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த தொழில்துறையினர், தினமும் பார்வையிட்டு, புதிய வரவுகள் குறித்து விசாரித்து, தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர்.
இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளர்கள் கூறுகையில், 'யார்னெக்ஸ்' உட்பட, ஐ.கே.எப்., வளாகத்தில் நடந்து வரும் கண்காட்சிகள், நாளை (இன்று) நிறைவு பெறுகிறது. தினமும், ஆயிரக்கணக்கானோர், கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். மொத்தம் உள்ள, 319 'ஸ்டால்'களிலும் வர்த்தக விசாரணை நடந்துள்ளது,' என்றனர்.