ADDED : நவ 28, 2024 06:27 AM
பல்லடம்; பல்லடம் நகராட்சியில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 8 கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி கமிஷனர், நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நகராட்சி கமிஷனர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு, கடந்த, 2021 முதல் தற்போது வரை எட்டு கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த, 2021 முதல் 2023 ஜூன் வரை விநாயகம் கமிஷனராக இருந்தார். அதன்பின், சண்முகராஜா, ஸ்ரீதேவி, முத்துசாமி, சுகுமார், பானுமதி, சுகுமார் ஆகியோரை தொடர்ந்து, தற்போது, 8வது கமிஷனராக மனோகரன் பொறுப்பேற்றுள்ளார். இவ்வாறு, பணியிட மாற்றம் செய்யப்பட்ட கமிஷனர்கள் ஒவ்வொருவரும், 6 மாதங்கள் மற்றும் ஒரு ஆண்டுக்குள் மட்டுமே இங்கு பணியாற்றி உள்ளனர்.
அடிக்கடி கமிஷனர்களை மாற்றுவதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. கமிஷனர்கள் தொடர்ந்து மாற்றப்படுவதால், நிர்வாக ரீதியாக பணிகளில் தொய்வு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு, யார் கமிஷனராக உள்ளார்கள் என்பதே தெரியாமல் குழப்பம் ஏற்படக்கூடும். எனவே, இனி அடிக்கடி கமிஷனர்கள் மாற்றப்படுவதை தவிர்க்க தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.