/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அன்று நெல் வயல்... இன்று கான்கிரீட் காடு
/
அன்று நெல் வயல்... இன்று கான்கிரீட் காடு
ADDED : நவ 24, 2025 05:55 AM

அன்னுாரில் இருந்து வழிந்தோடி வரும் நல்லாறு, அவிநாசியின் மேற்கு பகுதியான தாமரைக்குளம் மற்றும் வடக்கு பகுதியான சங்கமாங்குளத்தில் கலக்கிறது. அங்கிருந்து வெளியேறும் உபரி நீர், திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள அனைத்து ஊர்கள் வழியாக பாய்ந்து, திருப்பூர் நோக்கி செல்கிறது.இன்று... திருமுருகன்பூண்டியில் உள்ள நல்லாற்றின் நிலை அவலத்தின் உச்சம். ஓடை என்பதற்கான அறிகுறியே இல்லாமல், உருக்குலைந்து, சிதைந்து கிடக்கிறது. குப்பை கழிவுகளால் நிரம்பி, சுகாதார சீர்கேட்டின் உச்ச அடையாளமாக நல்லாறும், திருமுருகன்பூண்டியும் மாறியிருக்கிறது.
தண்ணீர் வளம் செழிப்பு; வயக்காடு என அழைப்பு
திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர் சுப்ரமணியம்(மா.கம்யூ.) கூறியதாவது:
இங்குள்ள அணைப்பாளையத்தில் பிரிட்டிஷ் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டு, நல்லாற்று நீர் தேக்கி வைக்கப்பட்டது. அங்குள்ள கூப்பிடு பிள்ளையார் கோவில் பின்புறம் உள்ள பகுதிகளில், வாய்க்கால் வழியாக தண்ணீர் பாய்ந்தது. நீர் வளம் நிறைந்திருந்ததால், அங்கு, 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில், நெற்பயிர் விளைவிக்கப்பட்டு, செழிப்புடன் இருந்தது. அப்பகுதி 'வயக்காடு' என, இன்றளவும் அழைக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட, 50 ஆண்டுகள் முன், அங்குள்ள அணை, பழுதடைந்த நிலையில், பொதுப்பணித்துறையினர் புதுப்பித்தனர். 'அணைப்புதுார்' என பெயர் வரக்காரணமும் அந்த அணை தான். தற்போது, வயக்காடு இருந்த பகுதி முழுக்க வீட்டுமனைகளாக மாறி கட்டடங்களாக உருவெடுத்திருக்கிறது.
தெப்பக்குளத்துக்கு செல்லாத தண்ணீர்
கடந்த காலங்களில், அந்த அணையில் இருந்து பூண்டி, சுள்ளிக்காடு பால்காரர் தோட்டம், செட்டியார் தோட்டம் வழியாக, பூண்டி நகராட்சி அலுவலகம் ஒட்டிய மெயின் ரோட்டை கடந்து, திருமுருகநாதர் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் நல்லாற்று நீர் நிறைந்து காணப்படும். ஆண்டுதோறும் நடக்கும் கோவில் தேர்த்திருவிழாவின் போது, அந்த தெப்பக்குளத்தில் தான் தெப்ப தேர், வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கோவில் சிறப்பு பெற, இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.தற்போது, நல்லாற்று நீர் வழித்தடம் அனைத்தும் ஆக்கிரமிப்பாலும், பராமரிப்பின்றி அடைபட்டும், தடைபட்டும் இருப்பதாலும், தெப்பக்குளத்துக்கு நல்லாற்று நீர் செல்வதில்லை. இதனால், 'போர்வெல்' தோண்டப்பட்டு, கோவிலில் நடக்கும் தெப்பத்தேர் விழாவின் போது, 'போர்வெல்' நீர் நிரப்பப்படுகிறது.திருமுருகநாதர் கோவில் பின்புறம் உள்ள நீலகண்டியம்மன் கோவிலையொட்டி செல்லும் ஓடை, நல்லாற்றில் இணைகிறது. அப்பகுதியை 'கூடுதுறை' என்றும் சொல்வர். பூண்டி பாலம் அருகில், நல்லாற்று கரையோரம் இறந்தவர்களை எரியூட்டும் தகன மேடையும் இருந்தது; அது, தற்போது புதர்மண்டி பாழடைந்திருக்கிறது.
இவ்வாறு, சுப்ரமணியம் கூறினார்.

