/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உனக்கொரு எல்லை; உலகத்தில் இல்லை
/
உனக்கொரு எல்லை; உலகத்தில் இல்லை
ADDED : ஆக 28, 2025 11:20 PM

வி ளையாட்டை பொறுத்தவரை, திறமை பட்டை தீட்டப்பட்டால் தான், அது சாதனையாக மாறும். அதுவும் வறுமை, ஏழ்மையை தாண்டி திறமையில் ஜொலிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு, 'உதவி' என்ற மூன்றெழுத்து, அவர்கள் சாதனையின் உச்சாணியை எட்டச் செய்கிறது.
திருப்பூரில் செயல்படும் 'மை இந்தியா; மை ஸ்கூல்' அமைப்பும், அதன் அங்கமான 'தமிழ் வீரா டி ஸ்போர்ட்ஸ் கிளப்' அமைப்பினர் இணைந்து, ஏழ்மை, வறுமையிலும் விளையாட்டில் ஜொலிக்கும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணம் மற்றும் உதவிகளை வழங்கி, ஊக்குவித்து வருகின்றனர்.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கூறியதாவது: பள்ளியில் இருந்து தான் மாற்றம் துவங்குகிறது. குழந்தைகளுக்கு கல்வி கற்க, விளையாட வாய்ப்பு வழங்கினால் தான், அவர்களின் திறமை வெளிப்படும்.
திறமையுள்ள மாணவர்களில், எண்ணற்றோர் குடும்ப வறுமையின் பிடியில் இருப்பதால், அவர்கள் விளையாட்டில் சாதிக்க முடிவதில்லை; அத்தகைய மாணவர்களை அந்தந்த பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் வாயிலாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபரணங்கள், காலணி, டி- சர்ட், சார்ட்ஸ் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்கி வருகிறோம். ஒரு விளையாட்டு வீரனுக்கு, திறமை எந்தளவு முக்கியமோ, அந்தளவு விளையாட்டு உபகரணமும், உடைகளும் முக்கியம்.
தடகளம், குத்துச்சண்டை, சதுரங்கம், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியதன் விளைவாக, அவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர். சில மாணவர்கள் ராணுவம், காவல்துறையிலும் இணைந்துள்ளனர்.
உடல், உள்ளம் ஆரோக்கியம் விளையாட்டே உறுதுணை தடகளம், கால்பந்து விளையாட்டில் சாதனையாளராக வலம் வந்த சவுந்தர்ராஜன், பல்வேறு மாநில, தேசிய மற்றும் பல்கலை அளவிலான தடகள போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டு வருகிறார். 32 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர், தனது பணிக்காலத்தில், ஏராளமான ஹாக்கி, தடகளம் உள்ளிட்ட பல விளையாட்டுகளில், வீரர்களை உருவாக்கியிருக்கிறார். இவர் வழங்கிய பயிற்சியின் விளைவாக, விளையாட்டில் சாதித்து, காவல் துறை, ராணுவம், ரயில்வே மற்றும் வங்கிப்பணியில் இணைந்தவர்கள் பலர்.
இவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில், அண்ணா பல்கலை சார்பில், கடந்த, 2023ல் 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
அவர் கூறியதாவது: இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், தங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும். விளையாட்டின் மூலமே ஆரோக்கியமான உடல், உள்ளம் மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெற முடியும். முழு உடல் நலத்துடன் இருந்தால் தான், எதையும் சாதிக்க முடியும்.
இன்றைய தலைமுறையினருக்கு விளையாட்டில் சாதிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன; மத்திய, மாநில அரசுகள் பல உதவிகள் வழங்குகின்றன. இவையெல்லாம் முழுமையாக, கூடுதலாக கிடைக்க வேண்டும். சர்வதேச பயிற்சி முறைகள், தொழில்நுட்ப உதவி, தரமான விளையாட்டு உபகரணம், பயிற்சிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவது அவசியம்.
கிரிக்கெட்டில் சாதித்தஅரசுப்பள்ளி மாணவியர் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,400 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். விளையாட்டு ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை அடையாளங்கண்டு, கேரம், கபடி என, அவர்களுக்கான ஆர்வமுள்ள விளையாட்டில் பயிற்சி வழங்க துவங்கினர், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள்.
''சார்...எங்களுக்கு கிரிக்கெட் விளையாடணும்ன்னு ஆசை; சேர்த்து விடுங்க...'' என, சில மாணவிகள் கேட்க, கிரிக்கெட் ஆர்வமுள்ள மாணவிகளை இணைத்து ஒரு அணியை உருவாக்கினார், உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார்.
டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாட பயிற்சி பெற்ற மாணவிகள், பின் ரப்பர் பந்து, கிரிக்கெட் பந்தில் பயிற்சி பெற்று, கிரிக்கெட் வீராங்கனைகளாக உருவெடுத்தனர். மாணவிகளில் சக்தி அபிராமி, ஞானஸ்ரீ ஆகியோர், 19 வயது பிரிவில் தமிழக அணியில் இடம் பெற்று, காஷ்மீர் சென்று விளையாடி வந்திருக்கின்றனர். 17 வயது பிரிவில், மாணவி தேவிபாலா, தமிழக அணிக்காக விளையாடியிருக்கிறார்.
மேலும், குறுமைய விளையாட்டுப் போட்டியில், இப்பள்ளி மாணவியர் கிரிக்கெட் அணி தான், கடந்த இரு ஆண்டாக சாம்பியன்.
உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார் கூறியதாவது: கிரிக்கெட் விளையாட்டில் சாதித்து வரும் மாணவிகளின், திறமையை பட்டைத்தீட்டி வருகிறோம். சில மாணவிகளின் குடும்பம், பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் உள்ளது.
அவர்களுக்கு நன்கொடையாளர்கள் வாயிலாக உடை, கிரிக்கெட் உபகரணம் உள்ளிட்டவற்றை பெற்று கொடுத்துள்ளோம். மாநில, தேசிய மற்றும் குறுமைய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அவர்கள் வெற்றி பெற்றதன் வாயிலாக கிடைக்கும் சான்றிதழ், அவர்களின் கல்லுாரி கல்வியில் கட்டண சலுகை, அரசுப்பணியில் முன்னுரிமை உள்ளிட்ட சலுகைகளை பெற உதவியாக இருக்கும்.