/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ரூ.22.50 லட்சம் கடனுக்காக 9 நாள் கட்டி வைத்து அடி
/
ரூ.22.50 லட்சம் கடனுக்காக 9 நாள் கட்டி வைத்து அடி
ADDED : மார் 09, 2025 02:37 AM
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜபருல்லா, 34. இவர், சில மாதங்களுக்கு முன், கண்ணமங்கலத்தை சேர்ந்த தீபன், 31, என்பவரிடம், 22.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, சிலரிடம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்திருந்தார் என கூறப்படுகிறது. இதை அறிந்த தீபன், பணத்தை கேட்டதால், ஜபருல்லா தலைமறைவானார்.
அவர், கடந்த, 24ம் தேதி, ஆரணி அடுத்த நரியம்பாடி எட்டியாபுரம் கிராமத்தில் தங்கியிருப்பதாக, தீபனுக்கு தகவல் கிடைத்தது. தீபன் தன் நண்பர்கள், ஐந்து பேருடன் ஜபருல்லாவை காரில் கடத்திச் சென்று தன் நண்பர்கள், உறவினர் வீடுகளில் வைத்து ஒன்பது நாட்கள் சரமாரியாக தாக்கி துன்புறுத்தினார்.
கடந்த, 5ம் தேதி ஆரணி டவுன் சூரிய குளம் பகுதியில் ஜபருல்லாவை அடைத்து வைத்திருந்த போது, ஆரணி டவுன் போலீசார் ஜபருல்லாவை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின்படி, நேற்று முன்தினம் மாலை, தீபன், 31, உள்ளிட்ட மூவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள, இருவரை தேடி வருகின்றனர்.