/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
திருவண்ணா மலையில் நிலச்சரிவு 7 பேர் சிக்கியதாக தகவல்; மீட்பு பணியில் தொய்வு
/
திருவண்ணா மலையில் நிலச்சரிவு 7 பேர் சிக்கியதாக தகவல்; மீட்பு பணியில் தொய்வு
திருவண்ணா மலையில் நிலச்சரிவு 7 பேர் சிக்கியதாக தகவல்; மீட்பு பணியில் தொய்வு
திருவண்ணா மலையில் நிலச்சரிவு 7 பேர் சிக்கியதாக தகவல்; மீட்பு பணியில் தொய்வு
ADDED : டிச 02, 2024 04:34 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை, 2,668 அடி உயரம், 14 கி.மீ துாரம் சுற்றளவு கொண்டது. இந்த மலையை ஆக்கிரமித்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக, 5,000க்கும் மேற்பட்ட அடுக்குமாடி, குடிசை, ஓடு கூரையால் ஆன வீடுகள் கட்டப்பட்டு, 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
மலை மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டவில்லை. இந்நிலையில், பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று மாலை, 5:00 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவின் போது, பலத்த மழை பெய்ததால், அக்கம்பக்கத்தினர் வெளியே வரவில்லை. இரவு, 7:00 மணிக்கு மழை சற்று குறைந்ததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்தபோது, குடிசை வீடு ஒன்றின் மீது மண் சரிந்து காணப்பட்டது.
பரிதவிப்பு
இந்த தகவல் அக்கம் பக்கத்தினரிடையே பரவி, வீட்டை சுற்றியுள்ள பகுதியில் வசித்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். மேலும், குடிசை வீட்டில் ஏழு பேர் வசித்ததாகவும், அவர்கள் உள்ளே நிலச்சரிவில் சிக்கியதாகவும் தகவல் பரவியது.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட முயன்றனர். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டார். அங்கு மின் விளக்கு வசதி இல்லாத நிலையில், இருட்டாக இருந்ததால், மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை.
நிலச்சரிவு என்பதால், மீட்பு பணியில் உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு போதிய அனுபவம் இல்லாத நிலையில், பரிதவித்தனர். இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை சபாநாயகர்
அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டால் மட்டுமே அதில், சிக்கியுள்ளவர்கள் எத்தனை பேர், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவரும். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியை சுற்றியுள்ளவர்களை மீட்டு, தனியார் பள்ளியில் முகாம் அமைத்து, 15க்கும் மேற்பட்டோரை தங்க வைத்துள்ளனர்.
அவர்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி சந்தித்து நலம் விசாரித்து, காணாமல் போனவர்களின் விபரங்களை கேட்டறிந்து வருகிறார். இச்சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.