/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பார்வையற்ற மாணவி தற்கொலை; விசாரணை கோரி போராட்டம்
/
பார்வையற்ற மாணவி தற்கொலை; விசாரணை கோரி போராட்டம்
ADDED : மார் 10, 2025 11:50 PM

திருச்சி : திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், அதிகாரிகள் விசாரணை நடத்த வலியுறுத்தி, பார்வையற்றோர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரே, அரசு பார்வையற்றோர் பெண்கள் சிறப்பு பள்ளி உள்ளது. காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த ராஜேஸ்வரி, 18, அங்குள்ள விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்தார்.
தற்போது, பொதுத்தேர்வு எழுதி வந்த மாணவி, நேற்று முன்தினம் விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விடுதி கண்காணிப்பாளர் தகவலின்படி, அரசு மருத்துவமனை போலீசார், மாணவி உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காதல் விவகாரத்தால், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தெரிவித்ததால், மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பு குறைபாடு காரணமாகவே, மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றஞ்சாட்டினர்.
பார்வையற்றோர் சங்கத்தைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, அரசு மருத்துவமனை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது சிறப்பு பள்ளியாக இருப்பதால், கல்வித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை. சிறப்பு பள்ளியில், பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால் மாணவியரை கண்காணிப்பதில்லை.
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் சிறப்பு பள்ளியை கொண்டு வந்து, போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
மாணவி தற்கொலை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான், அசம்பாவிதங்களை தடுக்க முடியும் என, விழியிழந்தோர் சங்கத்தினர் வலியுறுத்தினர். போலீஸ் தரப்பில், முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். கோரிக்கை குறித்து அரசுக்கும், கல்வித் துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்புமாறு சமாதானப்படுத்தி, அவர்களை கலைத்தனர்.