/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கல் குவாரியால் கடும் பாதிப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
/
கல் குவாரியால் கடும் பாதிப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
கல் குவாரியால் கடும் பாதிப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
கல் குவாரியால் கடும் பாதிப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : ஏப் 30, 2024 05:45 AM
திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருமகவுண்டம்பட்டியில், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க.,வின், மணப்பாறை ஒன்றிய செயலர் ஆரோக்கியசாமி என்பவரால் கல் குவாரி நடத்தப்படுகிறது.
இங்கு கடந்த ஜனவரி மாதம் முதல், கிராவல் மண் மற்றும் உடைகல் எடுத்து வருகின்றனர். குவாரியில் பாறைகளை உடைக்க அதிக சத்தத்துடன் வெடி வைக்கப்படுகிறது.
இந்த அதிர்ச்சியில் கால்நடைகள் உயிரிழப்பு அப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், அப்பகுதி விவசாயி நிலங்களில் பயிர்கள் கருகி உள்ளன.
கருமக்கவுண்டன்பட்டி கிராமத்தில், பகல், இரவு என, 24 மணிநேரமும் லாரிகள் செல்வதால், சாலைகள் பாதிக்கப்பட்டு, மக்கள் நடமாடவே அச்சப்படும் சூழல் உள்ளது.
ஆகையால் குவாரியை தடை செய்ய வேண்டும் என்று கடந்த, 2 மாதங்களாக, கனிம வளத்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை, கருமக்கவுண்டன்பட்டி பிரிவு சாலையில் முட்களை பரப்பியும், கால்நடைகளை நிற்க வைத்தும், இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதையடுத்து மணப்பாறை தாசில்தார் தனலட்சுமி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, கனிம வளத்துறை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை லாரிகள் இயக்கப்படாது என்றும் உறுதி அளித்தனர்.
இதையடுத்து, 3 மணிநேரம் நடந்த மறியல் கைவிடப்பட்டது.

