ADDED : மார் 15, 2025 02:12 AM
திருச்சி:விடுதியில் பார்வைத்திறன் குறைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை, மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் தானாக விசாரணைக்கு எடுத்துள்ளது.
திருச்சி, புத்துார் பார்வையற்றோர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த, காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த ராஜேஸ்வரி, 18, என்ற மாணவி, 9ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக, பார்வையற்றோர் நலச்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். சென்னையிலும் இதுதொடர்பாக போராட்டம் நடந்தது.
மாணவியின் மரணம் குறித்த வழக்கை, மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் தானாக விசாரணைக்கு எடுத்தது. ஆணைய கமிஷனர் சுதன், திருச்சி போலீஸ் கமிஷனர் காமினிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், மாணவியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா, நடப்பு விசாரணை நிலை என்ன, இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆர்.டி.ஓ., விசாரணை நடந்ததா, அதன் அறிக்கையில் என்ன உள்ளது என, கேள்விகள் எழுப்பி, வரும் 20ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.