ADDED : ஜூலை 27, 2025 07:23 AM

திருச்சி: ஸ்ரீவில்லிபுத்துாரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியினால் அவருக்கு பூமாலையுடன் பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக் கொண்டாள். இதனால் ஆண்டாளுக்கு சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் என்ற பெயரும் ஏற்பட்டது.
ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்குமிடையே சம்பந்த உறவும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனையும் இருந்து வந்தது. பல காரணங்களால் இந்த வழக்கம் இடையில் நின்றது.
இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் இந்த வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரைத் தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்துாரிலிருந்தும், ஸ்ரீவில்லிப்புத்துார் தேரோட்டத்துக்கு முதல்நாள் ஸ்ரீரங்கத்திலிருந்தும் பரஸ்பரம் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.
நாளை (28ம் தேதி) ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நடக்கவுள்ளதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், பழங்கள், சந்தனம், தாம்பூலம் உட்பட மங்களப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் கோயிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இதற்காக நேற்று மாலை ரங்கநாதர் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் மங்களப் பொருட்கள் கோயில் ரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்கள் மற்றும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, உள்வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
பின் மங்களப் பொருட்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு இன்று மதியம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில், ரங்கநாதர் கோயில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணையருமான சிவராம்குமார் தலைமையில், அர்ச்சகர்கள், அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் வழியாக சமர்ப்பிக்கப்படும் என கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.