/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சிறுத்தை தாக்கி ஆடு பலி வேலுார் அருகே மக்கள் பீதி
/
சிறுத்தை தாக்கி ஆடு பலி வேலுார் அருகே மக்கள் பீதி
ADDED : மே 30, 2024 10:19 PM
வேலுார்:வேலுார் அருகே, ஆட்டை தாக்கி கொன்ற சிறுத்தையால், கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பெரிய தாமல் செருவு கிராமத்தையொட்டி வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் நீண்ட நாட்களாக உள்ளது. அவ்வப்போது, கிராம மக்கள் வளர்த்து வரும் ஆடுகளை கடித்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன், 45, என்பவர், ஆடுகளை கொட்டகையில் அடைத்து பராமரித்து வருகிறார். ஆட்டு கொட்டகையை கண்காணிக்க, 'சிசிடிவி' பொருத்தி உள்ளார். நேற்று காலை கொட்டகையை சென்று பார்த்தபோது, ஒரு ஆடு ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், 'சிசிடிவி' காட்சிகளை பார்த்தபோது, ஒரு சிறுத்தை ஆட்டை கடித்து கொன்றதும், நாய்கள் கூட்டமாக கூடி குரைத்ததால், சிறுத்தை தப்பியதும் தெரிந்தது. சிறுத்தையால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.