தனியார் நிறுவன ஊழியர் கொலை: கள்ளக்காதலி உள்ளிட்ட 4 பெண்கள் கைது
தனியார் நிறுவன ஊழியர் கொலை: கள்ளக்காதலி உள்ளிட்ட 4 பெண்கள் கைது
UPDATED : அக் 15, 2026 06:27 PM
ADDED : அக் 15, 2026 06:07 PM

குடியாத்தம்: தனியார் நிறுவன ஊழியர் கதிரவன், 40, என்பவரை அடித்து கொன்ற அவரது கள்ளக்காதலி நட்சத்திரா, 35, உட்பட, நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரத்தை சேர்ந்தவர் கதிரவன். தனியார் நிறுவன ஊழியரான இவர், வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். அருணாசலம் நகரை சேர்ந்த நட்சத்திரா என்பவருக்கு திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்து, தனியாக வசிக்கும் நட்சத்திராவுக்கும், திருமணமாகாத கதிரவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. சில நாட்களாக நட்சத்திராவிடம் பேசுவதை கதிரவன் தவிர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு நட்சத்திரா, அக்கா அமுதா, 55, அவரது மகள்கள் பிரபாவதி, 34, லட்சுமி, 32, ஆகிய நால்வரும் கதிரவனின் வீட்டிற்கு சென்றனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது.
இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்த கதிரவனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த மருத்துவர்கள், கதிரவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து நட்சத்திரா, அமுதா, பிரபாவதி, லட்சுமி ஆகிய நால்வரையும் நேற்று கைது செய்தனர்.
