குடியாத்தம் பா.ம.க., பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு கொலை
குடியாத்தம் பா.ம.க., பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு கொலை
UPDATED : நவ 10, 2026 12:00 AM
ADDED : நவ 09, 2026 11:24 PM

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பா.ம.க., பிரமுகர் ஞானவேல், 47, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல். பா.ம.க., அன்புமணி தம்பிகள் படை மாவட்டச் செயலராக இருந்த இவர், பின்னர் ராமதாஸ் அணிக்கு சென்றதால் பா.ம.க.,விலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன், 29. இருவருக்கும், உள்ளூரில் யார் பெரியவர் என்ற போட்டியில் முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று மாலை, ஞானவேலு, பூவரசனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், பூவரசன் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டதில், ஞானவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஞானவேல் உடன் இருந்த ரகு, 40, என்பவர் தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காயமடைந்து, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூவரசனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி ரவுடி
புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ரவுடி முரளி, 26. இவர், தன் நண்பர்கள் ஐந்து பேருடன் வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு குளுனி பள்ளி பின்புறம் நேற்று மாலை மது குடித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த எட்டு பேர் கும்பல், முரளியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பியது. முரளி, கடந்த ஆண்டு நடந்த ரவுடி ஜனா கொலை வழக்கில் தொடர்புடையவர். பழிக்கு பழியாக முரளி கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
