ADDED : ஜூலை 05, 2025 02:54 AM
வேலுார்:வேலுாரில், கல்லுாரி மாணவரை லத்தியால் அடித்த எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
வேலுார் மாவட்டம், பிரம்மபுரம் போலீஸ் எஸ்.ஐ., கார்த்திக் செல்வம், 25-ம் தேதி இரவு, 11:00 மணிக்கு காட்பாடியில், திறந்திருந்த கடைகளை மூட அறிவுறுத்தினார். அப்பகுதியில் ஹோட்டல் ஒன்று திறந்திருந்தது.
ஊழியர்கள் பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, கல்லுாரி மாணவர் ஒருவர் உணவு வாங்க வந்தார். இதைப்பார்த்த எஸ்.ஐ., கார்த்திக் செல்வம் மாணவரை அழைத்து, லத்தியால் வெளுத்து வாங்கினார்.
அடி தாங்க முடியாமல் மாணவர் கதறினார். இருப்பினும், மாணவரின் சட்டையை பிடித்து இழுத்து வந்த எஸ்.ஐ., கார்த்திக் செல்வம், அவரை தரையில் உட்கார வைத்து விசாரித்தார்.
இந்த காட்சிகள், ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ தற்போது பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மாணவரை தாக்கிய கார்த்திக் செல்வத்தை, ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.