/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மே தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை 1872 பாட்டில் பறிமுதல்: ஒருவர் கைது
/
மே தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை 1872 பாட்டில் பறிமுதல்: ஒருவர் கைது
மே தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை 1872 பாட்டில் பறிமுதல்: ஒருவர் கைது
மே தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை 1872 பாட்டில் பறிமுதல்: ஒருவர் கைது
ADDED : மே 02, 2024 06:53 AM

திண்டிவனம், : விடுமுறை நாளான மே தினத்தில், கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்தவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பார் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
மே தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திண்டிவனம் அருகே பிரம்மதேசம் ஏந்துார் ஏரிக்கரை பகுதியில் அரசு மதுபானங்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அப் பிரிவின் இன்ஸ்பெக்டர் சின்ன காமண்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இனாயத் பாஷா குழுவினர் ஏந்துார் ஏரிக்கரை பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் அரியந்தாங்கல் செல்லும் வழியிலுள்ள பிரம்மதேசம் டாஸ்மாக் கடையில் (கடை எண் 11582) பார் நடத்தி வரும் விஜி மற்றும் அவரது தந்தை தட்சிணாமூர்த்தி ஆகியோர் அரசு மது பாட்டில்களை கள்ளத்தனமாக கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
போலீசார் ரெய்டின் போது,பார் உரிமையாளர் விஜி, 32; அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சம்பவ இடத்திலிருந்த பிரம்மதேசம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் தட்சிணாமூர்த்தியை, 55; (விஜி தந்தை) போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம், விற்பனைக்காக வைத்திருந்த 1872 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். கைது செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டிகள், நேற்று மாலை திண்டிவனம் கலால் போலீஸ் நிலையத்தில், நுண்ணறிவு போலீசார் மூலம் ஒப்படைக்கப்பட்டனர்.
திண்டிவனம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா , முதியவர் தட்சிணாமூர்த்தி மற்றும் இவரது மகன் விஜி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தார். இதில் கைது செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தி, திண்டிவனம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

