/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டாஸ்மாக் பாரில் பள்ளம் தோண்டி மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது
/
டாஸ்மாக் பாரில் பள்ளம் தோண்டி மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது
டாஸ்மாக் பாரில் பள்ளம் தோண்டி மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது
டாஸ்மாக் பாரில் பள்ளம் தோண்டி மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது
ADDED : மே 03, 2024 02:39 AM

மரக்காணம்:விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் விஜி,32.
இவர் பிரம்மதேசம் டாஸ்மாக் கடை அருகே அரசு அனுமதி பெற்று பார் நடத்தி வருகிறார். டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன் பாரில் மதுபாட்டில் விற்பதாக நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் நேற்று முன்தினம் பாரில் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த 1,872 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து, விஜியின் தந்தை தட்சணாமூர்த்தியை கைது செய்தனர். விஜியை தேடிவருகின்றனர்.
தொடர் விசாரணையில், பார் அருகே பள்ளம் தோண்டி மது பாட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் பார் அருகே பள்ளம் தோண்டி பதுக்கி வைத்திருந்த 720 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதற்கு உடந்தையாக இருந்த பாரில் வேலை செய்யும், திருவண்ணாமலை மாவட்டம், குப்பன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் மகன் விக்னேஷ், 28; என்பவரை கைது செய்தனர்.
அதிகாரிகளை சரிகட்டி டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபானங்களை பெட்டி, பெட்டியாக ரகசிய இடத்தில் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வந்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடையில் இருப்பு உள்ளது போல் அரசுக்கும் கணக்கு கொடுத்துள்ளனர்.