/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் பைபாஸ் சாலை கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில் மேம்பாலம் 'ரெடி' வரும் 6ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது
/
திண்டிவனம் பைபாஸ் சாலை கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில் மேம்பாலம் 'ரெடி' வரும் 6ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது
திண்டிவனம் பைபாஸ் சாலை கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில் மேம்பாலம் 'ரெடி' வரும் 6ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது
திண்டிவனம் பைபாஸ் சாலை கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில் மேம்பாலம் 'ரெடி' வரும் 6ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது
ADDED : ஏப் 30, 2024 05:03 AM

வானுார்: புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில் விபத்துகளை தடுப்பதற்காக, 20.57 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மேம்பால பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மேம்பாலம் வரும் 6ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்ததாகும். இந்த சாலை வழியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன.
கடந்த காலங்களில், இந்த சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் வாகன போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறியது.
மேலும், அடிக்கடி விபத்துகளும் நடந்து வந்தது. இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதுச்சேரி - திண்டிவனம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க ஒப்புதல் அளித்தது.
கடந்த 2008ம் ஆண்டில், 38.620 கி.மீ., துாரத்திற்கு 273.6 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது. 8.143 கி.மீ., துாரத்திற்கு சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை, 5 இடங்களில் சுரங்க பாலங்கள், 2 பெரிய பாலங்கள், 5 சிறிய பாலங்கள், 33 பாக்ஸ் கல்வெர்ட், 30 பைப் கல்வெர்ட்டுகள், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.
கடந்த 2012ம் ஆண்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நான்குவழிச் சாலை திறந்து விடப்பட்டது.
ஆனால், சரியான திட்டமிடல் இல்லாததால், முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டப்படவில்லை.
இரும்பை, தைலாபுரம், கிளியனுார் சந்திப்பு, கீழ்கூத்தப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் மேம்பாலம் கட்டப்படாமல் சாலை திறக்கப்பட்டது.
இந்த சந்திப்புகள் வழியாக, இப்பகுதியில் அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், சாலையை கடந்து செல்கின்றனர்.
இந்த இடங்களில் மேம் பாலங்கள் இல்லாததால், ஆரம்பத்தில் இருந்தே விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது.
குறிப்பாக, கீழ்கூத்தப்பாக்கம் - கிளியனுார் சாலை சந்திப்பில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு, ஏராளமானோர் இறந்துள்ளனர்.
இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிளியனுார், கீழ்கூத்தப்பாக்கம் பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தினர். இதன் எதிரொலியாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலமாக, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 20.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. 580 நீளத்திற்கு மேம்பாலமும், 950 மீட்டர் நீளத்திற்கு சர்வீஸ் ரோடும் அமைக்கப்படுகிறது.
ஓராண்டு காலத்திற்குள் மேம்பால பணியை முடிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, கடந்த மார்ச் மாத இறுதிக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால், 80 சதவீத பணிகள் மட்டுமே அப்போது நிறைவு பெற்றிருந்தது.
தற்போது, மேம்பாலத்தின் மேல் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வெள்ளை அடிக்கும் பணிகளும், இருபக்கமும் 12 சோலார் விளக்குகள் பொருத்தும் பணிகளும் நடந்து வருகிறது.
ஏற்கனவே ஒரு ைஹமாஸ் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதால், மேம்பாலத்தின் இருபக்கமும் வாகனங்கள் செல்லாத வகையில், தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மேம்பாலப் பணிகள் முடிந்தாலும், சர்வீஸ் ரோட்டில், 60 மீட்டர் துாரத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இருப்பினும், மேம்பால பணிகள் நிறைவுபெற்று விட்டதால், வரும் மே 6ம் தேதியன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில், போக்குவரத்துக்கு திறந்து விட உள்ளோம். அதன் பிறகு, பிரச்னை உள்ள பகுதியில் சர்வீஸ் ரோடு முழுமையாக அமைக்கப்பட உள்ளது' என்றார்.

