/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி 3 பேருக்கு சிறை தண்டனை
/
ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி 3 பேருக்கு சிறை தண்டனை
ADDED : அக் 15, 2025 11:22 PM
திண்டிவனம்: கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த மூவருக்கு, தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டிவனம் அடுத்த சிங்கனுாரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25; ஆட்டோ டிரைவர். இவர் கடந்த ஜன., 17ம் தேதி, பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜக்காம்பேட்டை நோக்கி சென்றார். மயிலம் சாலையில் சென்றபோது, அவரை, சிங்கனுாரை சேர்ந்த ஏழுமலை மகன் மருதமலை, 25; திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த சுதாகர் மகன் அஜித்குமார், 22; முருங்கப்பாக்கத்தை சேர்ந்த செல்வமணி மகன் வெங்கடேசன், 23; ஆகியோர் வழிமறித்து நிறுத்தினர். பயணிகளை இறக்கி அனுப்பிவிட்டு, டிரைவரிடம் கத்தியை காட்டி, 1,300 ரூபாயை பறித்துச் சென்றனர்.
பின்னர், திண்டிவனம் டாஸ்மாக் கடை அருகே சென்ற மூவரும், அங்கு ஆட்டோவுடன் இருந்த சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த முத்து, 30; என்பவரிடம் ஆட்டோவை சவாரிக்கு வரு மாறு அழைத்தனர். அவர் வர மறுத்ததால், முத்துவை மிரட்டி, ஆட்டோவை கடத்தி சென்றனர்.
புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து மருதமலை உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, திண்டிவனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை நடத்திய நீதிபதி இளவரசி, மருதமலை, அஜித்குமார், வெங்கடேசன் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.