/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மானியத்துடன் 3,142 வீடுகள் : ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு
/
அரசு மானியத்துடன் 3,142 வீடுகள் : ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு
அரசு மானியத்துடன் 3,142 வீடுகள் : ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு
அரசு மானியத்துடன் 3,142 வீடுகள் : ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 24, 2025 03:47 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு நிதியுதவியுடன், 3,142 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு மற்றும் 2018 ம் ஆண்டில் பிளஸ் கணக்கெடுப்பு பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், நிலுவையிலுள்ள பயனாளிகளுக்கு 2024-25 ஆண்டிற்கான பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ், விழுப்புரம் மாவட்டத்திற்கு 725 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.2.82 லட்சம் மதிப்பீட்டில் 20 கோடியே 46 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்புகள் கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி 230 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 495 வீடுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆதிவாசிக்கான வீடுகள் பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி மகா அபியான் திட்டக் கணக்கெடுப்பு பட்டியல்களின் அடிப்படையில், கடந்த, 2023-24 மற்றும் 2024-25 ம் நிதி ஆண்டுகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 238 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் தலா, 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 113 கோடியே 91 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின்படி, கடந்த 2023-24 ம் நிதி ஆண்டிற்கு 640 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 520 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024-25 ம் நிதி ஆண்டிற்கு 1,598 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 72 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில், 592 வீடுகள் நிறைவு பெற்றுள்ளன.
நகர்ப்புற மேம்பாடு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் படி கடந்த, 2023-24 நிதி ஆண்டிற்கு, விழுப்புரம் மாவட்டத்தில் 179 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், மத்திய அரசின் மானியம் ரூ.1.50 லட்சம் மற்றும் மாநில அரசின் மானியம் ரூ.60 ஆயிரம் உட்பட ரூ.2.10 லட்சம் உதவியுடன் பயனாளிகள் பங்களிப்பு தொகையுடன் வீடு கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி, பயனாளிகளின் சொந்த இடத்தில் 300 சதுர அடி பரப்பளவிற்கு குறையாமல் தங்களது ஓடு அல்லது ஓலை வீட்டினை கான்கிரீட் வீடாக கட்டிக் கொள்ளும் திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிப்பகுதியில் 138 பயனாளிகள் தேர்வானதில், 105 பேர், வீடுகளை கட்டி முடித்துள்ளனர்.
அரகண்டநல்லுார், செஞ்சி, மரக்காணம், வளவனுார், விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சி பகுதியில் 41 பயனாளிகள் தேர்வானதில், 23 பேர், கான்கிரீட் வீடுகளை கட்டி முடித்துள்ளனர். இத்திட்டத்தில், 128 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த 2 ஆண்டுகளில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்படி, ரூ. 137 கோடி நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 3 ஆயிரத்து 142 வீடுகள் இலக்கு நிர்ணயம் செய்ததில், 950 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.