/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லோக்அதாலத் முகாமில் 3,494 வழக்குகளுக்கு தீர்வு
/
லோக்அதாலத் முகாமில் 3,494 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : டிச 14, 2025 06:13 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த லோக்அதாலத் முகாமில் 3,494 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 44.53 கோடி ரூபாய்க்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், 2025ம் ஆண்டுக்கான 4வது தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நேற்று நடந்தது.
தொடக்க நிகழ்ச்சிக்கு, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ஜெயச்சந்திரன் வரவேற்றார்.
மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ராஜசிம்மவர்மன் துவக்கி வைத்து பேசுகையில், 'பொதுமக்கள் தங்களின் நீண்டகால வழக்கு பிரச்னைகளுக்கு கட்டணம் மற்றும் மேல்முறையீடு இன்றி எளிதாக தீர்வு கிடைக்கும்.
மாவட்டத்தில், இந்தாண்டு முதல் கட்ட லோக்அதாலத்தில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 20.50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 3,958 வழக்குகளுக்கு 25.36 கோடி ரூபாய் இழப்பீடும், மூன்றாம் கட்டமாக 2,586 வழக்குகளுக்கு 30.49 கோடி ரூபாய்க்கு இழப்பீடும் பெற்று வழங்கப்பட்டது. இன்று 4வது முகாம் நடக்கிறது.' என்றார்
முகாமில், மாவட்டம் முழுதும் 23 அமர்வுகளில் நிலுவையில் உள்ள 8,000க்கும் மேற்பட்ட வழக்குகளில் 3,073 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 40.39 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
மேலும் வங்கி வாராக்கடன் சார்ந்த 5000க்கும் மேற்பட்ட வழக்குகளில் 421 வழக்குகளுக்கு 4.14 கோடி ரூபாய்க்கு இழப்பீடும் வழங்கப்பட்டது. மொத்தம் 3,494 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 44 கோடியே 53 லட்சத்து 32 ஆயிரத்து 467 இழப்பீடு பெற்று வழங்கப்பட்டது.
நீதிபதிகள் பாக்கியஜோதி, வினோதா, ஸ்ரீராம், ராஜமகேஷ், ஜீவநந்தினி, தமிழ்ச்செல்வன், வரலட்சுமி, பாலசுப்ரமணியன், வெங்கடேசன், முருகன், பாலரத்னா, ராஜேஸ்வரி, சந்திரகாசபூபதி, அரவிந்த்பாரதி பங்கேற்றனர்.

