/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கி.பி.8ம் நூற்றாண்டு சிற்பம் மேல்மலையனூரில் கண்டுபிடிப்பு
/
கி.பி.8ம் நூற்றாண்டு சிற்பம் மேல்மலையனூரில் கண்டுபிடிப்பு
கி.பி.8ம் நூற்றாண்டு சிற்பம் மேல்மலையனூரில் கண்டுபிடிப்பு
கி.பி.8ம் நூற்றாண்டு சிற்பம் மேல்மலையனூரில் கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 06, 2025 04:31 AM

செஞ்சி: மேல்மலையனுார் அருகே கி.பி., 8 ம் நுாற்றாண்டை சேர்ந்த 'லகுலீசர்' சிற்பத்தை ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த மேல்புதுப்பட்டு கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கி.பி., 8ம் நுாற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால 'லகுலீசர்' சிற்பம் இருப்பதை கண்டறிந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மேல்புதுப்பட்டு ஏரியை ஒட்டிய சம தளத்தில் பாறை மீது 3 சிற்பங்களை நிறுத்தி வைத்துள்ளனர். முதலில் உள்ள விநாயகர் சிற்பம் சிதைந்துள்ளது.
தொடர்ந்து, 2வது சங்கு சக்கரத்துடன் கூடிய விஷ்ணு சிற்பம் பாதியளவே உள்ளது. மேலும், 3வதாக உள்ள லகுலீசர் சிற்பம் முழு அளவில் உள்ளது. இந்த சிற்பம் கி.பி.8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.
லகுலீசரை சைவ ஆகமங்களில் சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றாக குறிப்பிடுகின்றனர். குஜராத் மாநிலம் காயாரோஹனம் எனும் ஊரில் பிறந்தவர்.
சைவத்தின் ஒரு பிரிவான பாசுபதம் இவரால் தோற்றுவிக்கப்பட்டது. பாசுபத சைவ தத்துவங்கள் 4ம் நூற்றாண்டில் இருந்து தமிழகத்தில் பரவத் தொடங்கின.
லகுலீசர் சிற்பங்கள் தமிழகத்தில் மதுரை அரிட்டாபட்டி குடைவரைக் கோயில், விழுப்புரம் மாவட்டம் நன்னாடு, முன்னுார் பகுதியில் காணப்படுகின்றன.
இங்குள்ள சிற்பத்தில் லகுலீசர் வலது காலை தொங்கவிட்டும் இடது காலை மடக்கியும் அமர்ந்துள்ளார். காது, கழுத்து, கைகளில் அணிகலன்கள் உள்ளன.
வலது கை தண்டத்தினை பற்றியும், தண்டத்தில் பாம்பு ஒன்று படம் எடுத்த நிலையிலும் உள்ளது. இடது கை தொடை மீதும், அதன் அருகே மற்றொரு பாம்பு சிற்பமும் உள்ளது.
இங்குள்ளவர்கள் காளியம்மன் கோவிலின் காவல் தெய்வங்களாக இந்த சிற்பங்களை வணங்கி வருகின்றனர். 1200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சிவாலயம் இருந்து மறைந்திருக்க வேண்டும். பல்லவர்களின் கலை, சமய வரலாறு மற்றும் லகுலீசர் வரலாற்றிற்கும் மேல்புதுப்பட்டு சிற்பங்கள் புதிய வரவாக உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது முனுசாமி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.