/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையில் திடீர் பள்ளங்களால் விபத்து அபாயம்
/
சாலையில் திடீர் பள்ளங்களால் விபத்து அபாயம்
ADDED : நவ 01, 2025 02:50 AM

விழுப்புரம்: விழுப்புரம் சுதாகர் நகர், கணபதி நகர் மெயின்ரோடு முழுவதும் சேதமடைந்து, திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரே செல்லும் சுதாகர் நகர், கணபதி நகர் மெயின் ரோடில், கடந்தாண்டு பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் எடுத்து, குழாய்கள் பதித்தனர்.
தொடர்ந்து படிப்படியாக வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இத்திட்டத்திற்காக, 2 கி.மீ., தொலைவில் புதிய சிமெண்ட் சாலை முழுவதும் உடைக்கப்பட்டு, பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிக்கப்பட்டன.
சாலையின் மையத்தில் பள்ளம் எடுத்து, பாதாள சாக்கடை திட்ட மெயின் குழாய் அமைத்தும், பிறகு ஓரங்களில், வீடுகளுக்கு இணைப்பு வழங்க இருபுறங்களிலும் சாலை உடைக்கப்பட்டும் கிடக்கிறது.
கடந்த சில மாதங்களாக இந்த சாலை, மேடு, பள்ளங்களாகவும், சிமெண்ட் சாலை கற்கள் சிதறி கிடப்பதாலும், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொடர் மழையால் ஏற்பட்ட பள்ளங்களில், மழை நீர், கழிவு நீர் வழிந்து செல்வதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்குவது தொடர்கிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கிய இடங்களில் பாதாள சாக்கடைக்கு எடுத்த பள்ளங்கள் உள் வாங்கியபடி திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது.
இதே போல், நேற்று கணபதி நகர் சாலை பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டு சாலை உள் வாங்கியது. அதில், செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் டிப்பர் சிக்கி, அதன் அச்சு முறிந்தது.
அந்த இடத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த சாலை முழுவதும் பல இடங்களில் இதே போல் மேடு பள்ளங்கள் தொடர்வதால், புதிய சாலை அமைப்பதற்கு முன்பு, தற்காலிகமாக சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

